செய்திகள்

அமெரிக்க டாலரைப் போலவே இந்திய ரூபாயை பொதுப் பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்த தயார்

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தகவல்

கொழும்பு, ஜூலை 16–

இந்தியாவின் ரூபாயை பொதுப் பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்த தயராக உள்ளோம் என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில் அதிபராக இருந்துவந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையின் நிதி அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார். வரும் 21-ம் தேதி அவர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

இதையொட்டி இலங்கையில் நடைபெற்ற இந்திய சிஇஓ மாநாட்டில் கூறியதாவது:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு 2,500 ஆண்டுகால பழமைமிக்கது. இந்தியா மூலம் இலங்கை நிறைய பலன் அடைந்துள்ளது. தற்போது இந்தியா மிகப்பெரிய மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ள நிலையில், இந்தியாவின் ரூபாயை பொதுப் பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அமெரிக்க டாலரைப் போலவே இந்திய ரூபாயை பொதுப் பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்த தயாராக உள்ளோம். கடன் நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளிவந்த பிறகு, பொருளாதார வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவரது இந்திய பயணத்தின் போது எரி ஆற்றல், வேளாண் துறை சார்ந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *