காசான், அக்.24–
ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்காவின் டாலருக்கு பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
உலக அளவில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்காவின் ரூபாய் நோட்டான டாலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு உலக வங்கியுடன் ஒப்பந்தம் போட்டு, ஒரு திட்டத்தை செல்படுத்துகிறது எனில், அதற்காக உலக வங்கி வழங்கும் பணம் டாலரில்தான் இருக்கும். நாம் இதை வாங்கி, இந்திய பணமாக மாற்றி பின்னர் பயன்படுத்த வேண்டும்.
இதன் காரணமாக உலக நாடுகளில் 60 சதவீத நாடுகள் டாலரை இருப்பு வைத்திருக்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வரும்போது இருப்பு வைத்திருக்கும் டாலரை கொண்டு அதை சரி செய்துக்கொள்கின்றன. மறுபுறம், கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றை வாங்கவும் விற்கவும் டாலர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் வளர்ச்சி, நமது ரூபாயை மதிப்பற்றதாக மாற்றிவிடுகிறது. இதே பிரச்னை சீனா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கும் இருக்கிறது.
எனவே, இதனை சரி செய்ய, டாலருக்கு எதிராக புதிய ரூபாய் நோட்டுக்களை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் முயன்றுள்ளன. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ரஷ்யா வர்த்தம் மேற்கொள்ளும்போது, அந்தந்த நாட்டின் பணமாக கொடுத்தால் போதுமானது என்று கூறியிருக்கிறது. எனவே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
புதிய ரூபாய் நோட்டு?
இந்த வர்த்தக பரிமாற்றத்தை மேலும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டணிக்கு என பொதுவான ரூபாய் நோட்டை உருவாக்க ரஷ்யா யோசித்து வருகிறது. இந்த ரூபாய் நோட்டில் 5 நாடுகளின் கொடியும் இடம்பெற்றிருக்கும். இதை கொண்டு இந்த 5 நாடுகளுக்குள் பண பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இது டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும என்றும் ரஷ்யா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
அண்மையில் காசன் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்த ரூபாய் நோட்டுகள் பிரிக்ஸ் தலைவர்களிடம் காட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளை யார் யார் எல்லாம் அச்சடிக்க முடியும்? இதற்கு தலைமை அலுவலகம் எங்கு இருக்கும்? போலி ரூபாய் நோட்டுகள் வந்தால் அதை எப்படி தடுப்பது? பிரிக்ஸ் அமைப்பில் புதிய நாடுகள் சேர்ந்தல் அவர்களுக்கும் இந்த ரூபாய் பொருந்துமா? என பல கேள்விகள் இருக்கின்றன. அதற்கு விடைகிடைக்கும்போது, இது சாத்தியமாகும்.