ஆர் முத்துக்குமார்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று ஆகஸ்ட் 22ம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசவுள்ளனர். இச்சந்திப்பின் போது பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பு நாடுகளைச் சேர்த்துக் கொள்வதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் ஒருமித்த நாணயப் புழக்கத்தை உருவாக்குமா?
இந்த மாநாட்டை நடத்தும் தென்னாப்பிரிக்கா, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர மேலும் 40 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.
கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’நீல், கடந்த 2001-ல் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயர்களை உள்ளடக்கிய “பிஆர்ஐசி”(BRIC) என்ற சுருக்கத்தை உருவாக்கினார்.
அந்த நேரத்தில் நடுத்தர வருவாயைக் கொண்ட அதே நேரம் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த நாடுகள் தான் அவை. இந்த நாடுகள் வரும் 2050ம் ஆண்டு உலகிலேயே அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளாக மாறும் என்று அவர் கணித்தார்.
2006ம் ஆண்டு இந்த நான்கு நாடுகளும் இணைந்து ‘பிரிக்’ நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. அதில் 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் இணைந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு என்ற பெயரை இந்த அமைப்பு பெற்றது.
பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து 324 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. அவர்களுடைய ஒட்டுமொத்த தேசிய வருவாய் 26 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது உலக பொருளாதாரத்தில் 26 சதவிகிதம் ஆகும்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களை சீரமைக்கும் நோக்குடன் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உயர்ந்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நாணய நிதியத்தில் 15 சதவிகித வாக்களிப்பு உரிமையை மட்டுமே கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நியூ டெவலப்மென்டல் பேங்க் (New Development Bank ) என்ற பெயரில் 250 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் ஒரு வங்கி கடந்த 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டு பிரிக்ஸ் நாடுகளின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இல்லாத எகிப்தும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துகொண்டன.
பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் ஒருமித்த நாணயப் புழக்கத்தை உருவாக்குமா? என்ற கேள்வியே கடந்த சில வாரங்களாக நிதி நிபுநர்களின் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும் எண்ண ஓட்டமாக இருக்கிறது.
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் இந்நாடுகள் முயற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. சர்வதேச நிதி, பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளில் டாலரின் செல்வாக்கு குறையும் போது உலக அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கமும் குறைந்துவிடும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றிருந்தார். அப்போது தத்தமது நாணயத்தில் வணிகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டது நினைவிருக்கலாம்.
பிரிக்ஸ் நாடுகளுக்கான பொது நாணயத்தை அறிமுகப்படுத்துவது கேலிக்குரியது என ‘பிரிக்’ என்ற கோட்பாட்டை உருவாக்கிய கோல்டுமேன் சாக்ஸ் வங்கியின் ஜிம் ஓ’நீல் இங்கிலாந்தின் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மாநாட்டில் இது பற்றிய விவாதம் இடம்பெறாது போனாலும் அந்தத் திட்டம் எல்லா தலைவர்களின் வரவேற்ப்பையும் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை!
ஒவ்வொரு பிரிக்ஸ் நாடும் ஒரு மிகப்பெரிய நாடாகவே கருதப்படுகிறது; அதில் மிகப்பெரிய நாடாக சீனா விளங்குகிறது.
ரஷியாவும் சீனாவும் அமெரிக்க ஆதிக்க போக்கை எதிர்க்கிறது. அதை தடுப்பதிலும் தீவிரமாக இருக்கிறது. இவ்விரு நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகின் சக்திவாய்ந்த குரலாக மட்டுமின்றி உலக விவகாரங்களில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கருதுகிறது
ஒவ்வொரு பிரிக்ஸ் நாடும் ஒரு மிகப்பெரிய நாடாகவே கருதப்படுகிறது, அவர்களின் சொந்தம் பிரச்சனைகள் பிற நாடுகளின் அனுகுமுறை அல்லது ஆலோசனைகளால் தீர்ந்து விடாது.மேற்குலக நாடுகளுடனான உறவுகளைப் பேணும் விஷயத்திலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே பல முரண்கள் நிலவுகின்றன.
துனிசியா பிரிக்சில் சேர விரும்புகிறது என்று அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார், அண்டை நாடான அல்ஜீரியா BRICS இல் சேர அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை தாக்கல் செய்தது .மேலும் துனிசியா அதன் வட ஆப்பிரிக்க அண்டை நாடுகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் போன்றவற்றுக்கு சீர்திருத்த முயற்சிகளும் தீவிரமாகவே எடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஆவணத்திலும் நிலையான குறிப்பு இருந்தபோதிலும், “சீனாவும் ரஷ்யாவும் பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் அந்தஸ்து ; சர்வதேச விவகாரங்களில் பங்கு வகிக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன .மேலும் சர்வதேச விவகாரங்களில் தங்கள் ஆசைகளுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது.
சீனவும் ரஷியாவும் இருசக்தி வாய்ந்த ஐநாவின் நிரந்திர உறுப்பினர்கள் ஆவர். எதிர்காலத்தில் பல மாற்றங்களை கொண்டுவர சாத்தியங்கள் இருக்கிறது. அதை உறுதி செய்யும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இம்முறை பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுகிறது.