செய்திகள்

அமெரிக்க, சீன தலைவர்கள் ஜோ பிடன்– ஷி ஜின் பிங் 7 மாதத்திற்குப் பிறகு பேச்சு

பீஜிங், செப். 11–

7 மாதங்களுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் தொலைபேசியில் உரையாடினார்.

உளவு, வர்த்தகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று உருவான விதம் ஆகிய காரணங்களால் சீனா – அமெரிக்கா உறவு மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்ற பிறகு, ஷி ஜின்பிங் – பிடன் ஆகியோர் இரண்டாவது முறையாக பேசி கொள்கிறார்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிடன் நிர்வாகம் மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பதற்றமான சூழலில் நிறைவடைந்தது. இருதரப்பு அதிகாரிகளும் பரஸ்பரம் கண்டனங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் போட்டி சண்டையாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு, இரு நாடுகளுக்கும் உள்ள பொறுப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல் சீன அரசு ஊடகமான சிசிடிவி, “இந்த தொலைபேசி அழைப்பு எதேச்சையானது என்றாலும் ஆழமானது என்று தெரிவித்துள்ளது. விரிவான கேந்திர பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இருதரப்பு சார்ந்த பல விஷயங்களை பேசியதாகவும் தெரிவித்துள்ளது.

மாறி மாறி குற்றச்சாட்டு

முன்னதாக, ஷின் ஜியாங்கில் உள்ள வீகர் இன மக்களை சீனா இனப்படுகொலை செய்வதாகவும் ஹாங் காங்கில் ஜனநாயக உரிமைகளை சீனா நசுக்குகிறது என்றும் அமெரிக்கா தெரிவித்தது. சீனா மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்த, அமெரிக்கா தூண்டுவதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா குற்றம் சாட்டியது.

இரு நாடுகளும் 2018ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது வர்த்தக போரிலும் ஈடுபட்டன.

அமெரிக்கா சீன பொருட்களின் மீது 360 பில்லியன் டாலர்கள் வரி விதித்தது. சீனா அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர்கள் வரி விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *