செய்திகள்

அமெரிக்க அதிபர் பிடன் அறிவுரையால் போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் இஸ்ரேல்

டெல் அவிவ், நவ.27–

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க அதிபர் பிடனும் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் 7–ந்தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், “இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்க, இருதரப்பினருக்கும் சரிசமமான சுதந்திரம், மாண்பை உறுதி செய்ய வேண்டும். அதுவே தீர்வாகும். இந்த இலக்கை எட்டும்வரை நாங்கள் ஓயமாட்டோம். எகிப்து, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய பிற மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறேன் என்றும் கடந்த சில வாரங்களாக அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி வருகிறேன்’’

இவ்வாறு ஜோ பிடன் கூறினார்.

போர் தொடரும்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபருடன் பேசியபோது, “ஹமாஸ் விடுவிக்கும் 10 இஸ்ரேலியப் பிணைக் கைதிகளுக்கு மாறாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதேவேளை பிணைக் கைதிகளை விடுவித்த பின்னர் ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலை மீண்டும் இஸ்ரேல் தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காசா சென்ற நெதன்யாகு

முன்னதாக காசா பகுதிக்கு பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்கிருந்த வீரர்களுடன் ஆலோசித்தார். பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் பேசுகையில்,

இந்த போரில் நமக்கு 3 இலக்குகள் உள்ளன. ஹமாசை ஒழிப்பது, பிணைக்கைதிகளை மீட்பது மற்றும் இஸ்ரேலுக்கு இனி காசா ஒரு ஆபத்தாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதாகும். நாம் நிச்சயம் அனைத்துப் பிணைக் கைதிகளையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவோம். நம்மை எதுவும் தடுக்க முடியாது. போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதில் வலிமை, சக்தி, விருப்பம், உறுதிப்பாடு நம்மிடம் உள்ளது என்பதில் உறுதியாக உள்ளோம். அதைதான் நாம் செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

போர் நிறுத்தத்தின் 4ஆம் நாளான இன்று, 50 பிணைக்கைதிகள், 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் சிறைபிடித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *