வாஷிங்டன், மார்ச் 3–
அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட நடக்கும் உட்கட்சி தேர்தலில் 3 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து அவர், ஜோ பிடனை எதிர்த்து களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பிடன் மீண்டும் களமிறங்க உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட, நிக்கி ஹாலே ஆகியோர் முயன்று வருகின்றனர்.
ஒவ்வொரு மாகாணமாக சென்று கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனையடுத்து வேட்பாளரை தேர்வு செய்ய குடியரசு கட்சி சார்பிலும் தேர்தல் நடந்தது. அதில், மிச்சிகன், மிசவுரி, ஐடாஹோ ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஒரு மாகாணத்தில் கூட நிக்கி ஹாலே வெற்றி பெறவில்லை. வரும் செவ்வாய்க்கிழமை எஞ்சிய 15 மாகாணங்களில் குடியரசு கட்சி சார்பில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் டிரம்ப்க்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஜோ பிடனை எதிர்த்து அவர் களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது.