நியூயார்க், ஜூலை 23–
அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றிலேயே அதிக அளவாக, கமலா ஹாரீஸ் போட்டியிட ஆதரவாக, 24 மணி நேரத்தில் 678 கோடி ரூபாய் தேர்தல் நிதி குவிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் தனது தேர்தல் பணிக்காக நிதி திரட்ட தொடங்கி உள்ள நிலையில், முதல் 24 மணி நேரத்தில் கோடிக்கணக்கில் நன்கொடை குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வரலாற்றில் முதல்முறை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில், வயது மற்றும் உடல் நலம் காரணமாக, உள்கட்சியில் எழுந்த எதிர்ப்பால், பின் அவர் திடீரென போட்டியில் இருந்து விலகினார். இதனை அடுத்து ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அந்த கட்சிக்கு 677.6 கோடி ரூபாய் நன்கொடை குவிந்துள்ளதாகவும் இதற்கு முன் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டபோது மிகக் குறைந்த அளவு தான் நன்கொடை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக குறுகிய காலத்தில் மிக அதிக அளவில் நன்கொடை குவிந்திருப்பதை பார்க்கும்போது கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி தொழில் அதிபர்களின் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக தெரிய வருகிறது.
அமெரிக்க அதிபர் வரலாற்றில் முதல் 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை ஒரே நாளில் குவிந்தது இதுதான் முதல் முறை என்றும் கூறப்படும் நிலையில், கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.