போட்டியிலிருந்து விலகிய ஜோ பிடன் ஆதரவு
வாஷிங்டன், ஜூலை 22–
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பிடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பிடன் அறிவிக்கப்பட்டார். அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஆக ஆதரவு தெரிவித்துள்ளார்.
தடுமாற்றம்
81 வயதான அதிபர் பிடன், தனது தேர்தல் பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென கூறப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் அதிருப்தியுடன் இருந்தனர். இந்நிலையில், தேர்தலில் இருந்து அவர் விலகி உள்ளார்.
அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம். இருந்தாலும் நான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். எஞ்சி உள்ள எனது பதவி காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன். இது ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து நான் எடுத்துள்ள முடிவு. இது குறித்து விரைவில் விரிவாக பேசுவேன். நான் மீண்டும் அதிபராக வேண்டும் என ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது அமெரிக்க மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றி.
கடந்த 2020-ல் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதும் துணை அதிபர் வேட்பாளராக நான் தேர்வு செய்தது கமலா ஹாரிஸை தான். அதிபர் தேர்தலில் இருந்து நான் தற்போது விலகியுள்ள நிலையில் இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அவருக்கு எனது முழு ஆதரவை வழங்க விரும்புகிறேன். நம் கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி டிரம்ப்பை வீழ்த்த வேண்டும் என பிடன் தெரிவித்துள்ளார். அதிபர் ஜோ பிடனின் பணிக்கு பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
கமலா ஹாரிஸ்
இந்த சூழலில் தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென ஆதரவு கோரப்பட்டு வருகிறது. அவரது ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்களிடம் இது தொடர்பாக பேசி வருகின்றனர்.
இது தொடர்பாக நேற்று மதியம் நடைபெற்ற ஜனநாயக கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்து, அது குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஹாரிசன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலம் உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனநாயக கட்சி மாநாட்டுக்கு முன்னதாக கட்சியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மக்களின் சார்பாக அதிபர் ஜோ பிடனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காக பல ஆண்டுகள் சிறப்பான தலைமைப் பண்புடன் அவர் பணியாற்றி உள்ளார். கட்சியின் வேட்பாளராக அதிபர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அது எனக்கு கவுரவம் அளிக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் நான் வெற்றி பெற விரும்புகிறேன். அதுவே எனது எண்ணமும் கூட. கட்சியையும், தேசத்தையும் ஒருங்கிணைத்து தேர்தலில் டிரம்ப்பை வீழத்துவேன் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.