வாஷிங்டன், நவ. 16–
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 2016ல் அமெரிக்க அதிபர் பதவியை ஏற்ற டொனால்ட் டிரம்ப், 2020ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக பிடன் போட்டியிட்டு வென்றார்.
வரும் 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக மீண்டும் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க கட்சி விதிகளின்படி 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்ப் உட்கட்சி பிரைமரி தேர்தலில் வெல்ல வேண்டும். அதாவது கட்சிக்கு உள்ளேயே இரண்டு, மூன்று பேர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவார்கள். இவர்களுக்குள் உட்கட்சி பிரைமரி தேர்தல்நடக்கும்.
இவர்களுக்குள் விவாத நிகழ்ச்சி தொடங்கி யார் அதிக பணத்தை நன்கொடையாக பெறுகிறார்கள் என்ற போட்டியும் நடக்கும். இதன் அடிப்படையில் கட்சி சார்பாக ஒருவர் பிரைமரி தேர்தலில் வென்று, கடைசியாக கட்சி சார்பாக அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார். டிரம்பும் இதே தேர்தல் நடைமுறைகளை கடந்து வர வேண்டும். தற்போது தற்போது பிரைமரி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நாமினேஷனை டிரம்ப் தாக்கல் செய்துள்ளார். பிரைமரி தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தால், இந்த நாமினேஷனை திரும்ப பெறுவார்.