நியூயார்க், ஜன. 27–
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்பின் 19 கோல்ஃப் மைதானங்கள், ரியல் எஸ்டேட், சொகுசு கார்கள், விமானங்களின் மொத்த சொத்து மதிப்பு 7 முதல் 8 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 65 ஆயிரம் கோடி) என கூறப்படுகிறது.
ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. அவர் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ளார். இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் டிரம்ப், இதற்கு முன்பு 2017 முதல் 2021 வரை ஜனாதிபதியாக இருந்தார். பதவியேற்பு விழா முடிவடைந்த உடனேயே, கடுமையான குடியேற்றக் கொள்கைகள், எரிசக்தித் துறையில் விரிவாக்கம் மற்றும் சிவில் சேவைப் பாதுகாப்பில் நிதி குறைப்புகள் உள்ளிட்ட பல நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ரூ.65 ஆயிரம் கோடி
டிரம்பிற்கு இருக்கும் சொத்துகளை பொறுத்தவரையில், அவரிடம் 19 கோல்ஃப் மைதானங்கள், ரியல் எஸ்டேட்கள் என 2016-ம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை அறிவித்தபோது, அவரது சொத்து மதிப்பு சுமார் 4.5 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டது. அண்மைகால புள்ளிவிவரங்களின்படி, ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ், அவரது சொத்து மதிப்பை $7.7 பில்லியன் (தோராயமாக ரூ.64,855 கோடி) என மதிப்பிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் உலகெங்கிலும் மொத்தம் 19 கோல்ஃப் மைதானங்களை சொந்தமாக வைத்திருக்கிறார். அவை அவருடைய மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த மைதானங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ளன. டிரம்பின் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யம் அவரது வணிகத்தின் அடித்தளமாக உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐந்தாவது அவென்யூவில் அமைந்துள்ள கட்டிடம் டிரம்ப் நிறுவனத்தின் தலைமையகம் ஆகும். இதில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக இடம் மற்றும் ஒரு ஆடம்பர ஷாப்பிங் மால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அதுதவிர நியூயார்க், சிகாகோ மற்றும் லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களில் டிரம்பிற்கு சொந்தமாக பெரிய வணிக கட்டிடங்கள் உள்ளது. அவரிடம் போயிங் 757 உட்பட தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் மற்றும் தொழில்கள் மூலமாக, டிரம்பின் சொத்து மதிப்பு 7முதல் 8 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
#donaldtrump #america #president