செய்திகள்

அமெரிக்கா நாடாளுமன்ற செனட் சபை தேர்தல்: பெரும்பான்மையை தக்க வைத்த ஜோ பைடன்

நியூயார்க், நவ. 14–

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், மேலவையான செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையைத் தக்க வைத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் நடைபெற்ற தேர்தல் என்பதால், முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. நாடாளுமன்றத் தோதலில் ஆளும் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுவதே வழக்கம். முந்தைய அதிபர்களும் இதே நிலைமையைச் சந்தித்துள்ளனர்.

ஜனநாயக கட்சி வெற்றி

ஆனால், அத்தகைய வழக்கத்தை மாற்றி தற்போதைய தேர்தலில் செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை மீண்டும் தக்க வைத்துள்ளது. இது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஜனநாயக கட்சி மொத்தம் 50 உறுப்பினா்களைப் பெற்றுள்ளது. அதையடுத்து, ஜனநாயக கட்சியின் பெரும்பான்மை உறுதியானது.

செனட் சபையில் குடியரசுக் கட்சிக்கு 49 உறுப்பினர்கள் உள்ளனர். ஜார்ஜியாவில் எந்தக் கட்சி வேட்பாளரும் பெரும்பான்மை பெறாததால், அங்கு டிசம்பர் 6-ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதிபர் பைடன், ஜார்ஜியா தேர்தலிலும் வென்று செனட் சபையில் ஜனநாயக கட்சியின் பலத்தை 51-ஆக உயர்த்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

தோதல் வெற்றி மூலமாக, தனது பதவிக் காலத்தின் இரண்டாவது பாதியை மக்கள் நலனுக்காக மேலும் சிறப்புடன் செலவிட உள்ளதாகவும் ஜாேபிடன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *