இந்தியாவுடன் உறவு வலுவாக உள்ளது: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பெருமிதம்
கிரீன்வில்லே, செப். 22–
3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார்.
பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது அவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா தரப்பில் தேசிய பாதுகாப்பு செயலர் அன்டோனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் துணை தலைவர் ஜேக் சுல்லிவான் உள்ளிட்டோரும் இந்திய தரப்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அமெரிக்க தூதர் வினய் மோகன் கவாத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் விவகாரம், ரஷ்யா மற்றும் இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பு மற்றும் அமெரிக்கா இந்தியா மருத்துவ கட்டமைப்பு குறித்தும் பேசப்பட்டது.
பிடன் பெருமிதம்
இந்நிலையில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பிடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது. இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.