நாடும் நடப்பும்

அமெரிக்கா, சீனா ஆதிக்கத்தில் ஐநாவின் பங்கு

மியான்மரில் ராணுவ தளபதி ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை சிறையில் வைத்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரப் பூர்வமாக ஆண்டு கொண்டிருக்கிறார் அல்லவா? அந்நாட்டிற்கு உலக நாடுகள் யாரும் ஆயுதங்களை விற்கக் கூடாது என்று ஐநா கட்டளை பிறப்பித்துள்ளது.

இது உண்மையில் அரிதான ஒரு ஐநா கட்டளை என்பதை உணர முடிகிறது. எண்ணெய் வள வளைகுடா பகுதியிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடையேயும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பல சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நமது எல்லைப் பகுதியில் தீவிரவாத சக்திகளின் ஊடுருவல், சீன எல்லையில் ராணுவ தாக்குதல்கள் நடந்தபோது சீனாவின் ஆதரவுடனே இயங்கும் ஐநா சபை எதையும் சொல்ல முடியாமல் தவித்தது!

ஐநா ‘பல் பிடுங்கப்பட்ட பாம்பு’ என்பதாகத்தான் சமீபமாக தெரிகிறது. காரணம் அமெரிக்காவின் தலையீடு இருக்கும் இஸ்ரேல், ஈரான், ஈராக் நாடுகளில் நடைபெறும் தாக்குதல்களில் அமெரிக்காவின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு சாதகமாக அறிக்கைகளை ஐநா வெளியிட்டு வருகிறது.

ஐநாவின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து இருப்பதால் ஐநா எடுக்கும் முடிவுகளை எந்தக் காரணத்தையும் சொல்லாமல் நிராகரிக்கும் உரிமை பெற்றுள்ளார்கள்.

அதாவது கூட்டாக ஐநா சபை மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆயுத தளவாடங்களை விற்காதே என உத்தரவிட்டாலும் சீனாவை விற்காமல் தடுத்துவிட முடியாது.

அதே நிலை பல்வேறு கட்டங்களில் அமெரிக்க ஆயுத விற்பனைகள் நடந்த போதெல்லாம் கண்டோம்.

உண்மை என்னவென்றால் உலக நாடுகளில் உள்ள ஏனைய நாடுகள் யாரும் ஆயுத தயாரிப்பில் நுழைந்து இந்த வர்த்தகத்தில் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காகவே ஐநா சபை செயல்படுவது போல் இருக்கிறது.

சிக்கல் நிறைந்த நாடுகளில் ராணுவம் களப்பணியாற்ற நவீன ஆயுதங்கள் தேவைப்படுவது ஏன்? என்பதை புரிந்து கொண்டவர்கள் அதை ஆதரிக்காவிட்டாலும் ஆயுத பேரம் நடைபெறத்தான் செய்யும் என்பதை மறுக்க மாட்டார்கள்.

மியான்மரில் சீனாவும் வளைகுடா பகுதியில் அமெரிக்க கூட்டணியும் சதிகளை அவிழ்த்துவிட்டு கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டு போர் பதற்றத்தை உருவாக்கி குண்டு சத்தம் முழங்க வைத்து வருவதை உலகமே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஐநா சபை உலக அமைதிக்காக உருவான அமைப்பு, ஆனால் நிரந்தர உறுப்பினர் ஈடுபட்டுள்ள தவறுகளை திருத்த வலிமையின்றி கையைப் பிசைந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படிக் குழந்தையை தூங்க வைக்க தொட்டிலை ஆட்டும் ஐநா சபை உறுப்பினர்களே அந்த குழந்தையை கிள்ளி அழ வைத்து வரும் நிலையில் அந்த உலக அமைப்பை விரிவாக்க இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் கோரி வருவதை ஐநா சபை ஏற்றுக் கொள்ளப் போவதேயில்லை!

ஐநா மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் ஒன்று கூடி நிரந்தர உறுப்பினர் நாடுகள் மீது கட்டுப்பாடுகள் வர ஐநாவின் புதிய அங்கமாக ஓர் மாற்று திட்டத்தை உருவாக்க முயற்சித்தாக வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தேர்தலை சந்திக்க இருந்த காலக்கட்டத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சீனா மீது குற்றம் சுமத்தியது, அது மட்டுமா? உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சாதகமாக இருப்பதால் இனி நாங்கள் அந்த அமைப்புக்கு நிதி உதவிகள் செய்ய மாட்டோம் என கூறிவிட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தது.

அதே நிலைப்பாட்டை ஐநா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருக்கும் உலக நாடுகளுக்கும் அதிகாரம் தரப்படுவது தானே நியாயம்.

காரணம் இந்தியாவும் கூடத்தான் ஐநாவின் செயல்பாட்டிற்கு ராணுவ வீரர்களை அனுப்புகிறது, வருடம் தவறாது ஐநா சபைக்கு தர வேண்டிய கட்டணத் தொகைகளை கொடுத்தும் விடுகிறது.

அப்படி இருந்தும் மியான்மர், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஆயுத தேவை என்று நம்மிடம் அணுகினாலும் நம்மால் அவர்களுக்கு தேவையான ஆயுதத்தை தயாரித்து விற்க முடியாது, அச்சமயத்தில் ஏதேனும் ரூபத்தில் ஐநா அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் அதிகாரம் பெற்று இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *