செய்திகள்

அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் தரைமட்டம்; 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்

புளோரிடா, ஜூன் 25–

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

புளோரிடா மியாமி-டேட் கவுண்டியில் அதிகாலையில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இடிபாடுகளுக்கு இடையெ மூன்று பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ப்ளோரிடா மாகாணத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தற்போது வரை 12 வயது சிறுவன் உள்பட 35க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். அத்துடன் 3 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர். மேலும் 99 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

100 பேர் நிலை என்ன?

கட்டிடம் முழுமையாக தரைமட்டமாகி உள்ளதால் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்கள் உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இடிந்தக் கட்டடம் 1981 இல் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டடம் எனவும், கட்டடம் இடிந்த இரவு, ஒரு குண்டு வெடித்தது போல் சப்தம் கேட்டது’ எனவும் கட்டடத்திற்கு அருகே வசிக்கும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டிடத்திற்குள் 18 லத்தீன் அமெரிக்கர்கள், அர்ஜென்டினாவைச் சேர்ந்த 9 பேரும் உருகுவை நாட்டைச் சேர்ந்த 6 பேர், பரகுவை நாட்டைச் சேர்ந்த 6 பேர் உள்பட ஏராளமானோர் கட்டடத்திற்குள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர், சேதம் குறித்த சரியான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *