செய்திகள்

அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் தொழிலதிபர் மோடிக்கு புகழாரம்

நியூயார்க், மே 16–

அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் தொழிலதிபர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் வசித்து வருபவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் தரார். பாகிஸ்தானில் பிறந்த இவர், 1990-ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்றார். அந்நாட்டின் முக்கிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பிலும் உள்ளார்.

குடியரசு கட்சியில் இருக்கும் அவர், டிரம்ப்பின் ஆதரவாளர். தொண்டு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும் உள்ள இவர், பால்டிமோர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தரார் கூறியதாவது:–

மோடி மீது நம்பிக்கை

மோடி வலிமையான தலைவர். இந்தியாவை புது உச்சத்துக்கு கொண்டு சென்றார். இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக பதவி ஏற்பார். மோடியால், இந்தியா மட்டுமல்ல, ஆசிய பிராந்தியமும், உலகமும் பலன்பெறும். கடினமான சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு வந்த இந்திய பிரதமர்களில் மோடி ஒருவர். பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகம் மற்றும் பேச்சுவார்த்தையை மோடி துவக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அமைதியான பாகிஸ்தான் என்பது, இந்தியாவுக்கும் நலம் பயக்கும். 97 கோடி இந்திய மக்கள், தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி உள்ளது பெரிய அதிசயம். உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம். வருங்காலத்தில், இந்திய ஜனநாயகத்தில் இருந்து மக்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள். மோடியைப் போன்று, பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என தாரார் கூறி உள்ளார்.

ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசிய நிலையில், பாகிஸ்தான் தொழிலதிபர் மோடியை புகழ்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *