செய்திகள்

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் கிடுகிடு விலை உயர்வு

நியூயார்க், மார்ச் 10–

அமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் பெட்ரோல் விலை ரூ.15 வரையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இறக்குமதியை நிறுத்துமாறு முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

அதன்படி, தற்போது ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

லிட்டருக்கு ரூ.15 உயர்வு

கடந்த ஆண்டு வரை ரஷ்யாவிடமிருந்து நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை அமெரிக்கா இறக்குமதி செய்து வந்தது. மேலும், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவல் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் ரூ.42 ஆக இருந்தது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.56 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.71 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அடுத்த சில நாட்களில் ரூ.85 வரை உயரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், அமெரிகாவில் டீசல் விலை கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் ரூ.62 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பிப்ரவரி மாதத்தில் ரூ.68 ஆகவும், தற்போது ரூ.81 ஆகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலை இன்னும் சில நாட்களில் ரூ.95 க்கு உயரலாம் என்றும் மதிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.