செய்திகள்

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ‘மாஸ்க்’ அணியாமல் செல்ல அனுமதி

நியூயார்க், ஏப். 28–

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி ‘மாஸ்க்’ அணிய தேவையில்லை என்று, அமெரிக்காவின் சிடிசி நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி, முகக்கவசங்களுக்கான வழிகாட்டுதல்களில் நேற்று தளர்வுகளை அளித்தது. அதன்படி, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதாவது, திறந்த வெளியில், சிறிய அளவு மக்கள் கூடும் இடங்கள், சிறிய கூட்டங்களை உடைய பொது நிகழ்வுகள் ஆகிய இடங்களில், தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் கலந்து கொள்ளலாம். தொற்றுக்கு முன்னர் இருந்தது போன்ற வாழ்வை பாதுகாப்பாக மீண்டும் துவக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனினும், திறந்தவெளி அல்லாத இடங்களிலும், மூடிய வளாகங்கள் மற்றும் அறைகளிலும், அதிக மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசங்கள் கட்டாயம் என்றும் எச்சரித்துள்ளது.

முகக்கவச விலக்கு

மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், முகக்கவசங்கள் இல்லாமல் வெளியில் நடப்பதற்கும், ஜாக்கிங் செய்வதற்கும், மலையேற்றங்களுக்கும், பைக்கில் செல்வதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுதவிர இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அணிவகுப்புகள் மற்றும் திறந்தவெளியில் நடக்கும் வேறு விதமான பொது நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொள்ள தகுதியுடையவர்களாகிறார்கள்.

மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆனவர்களும், அல்லது, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோசை செலுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆனவர்களும் இந்த தளர்வுகளுக்கு தகுதி பெறுகிறார்கள் என்று சி.டி.சி அங்கீகரிக்கிறது.

(ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை செலுத்திக்கொள்பவர்களுக்கு ஒரு டோஸ் பொதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *