வாஷிங்டன், பிப். 26–
அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது ரூ.43 கோடிக்கு விற்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை டிரம்ப் அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:– “நாங்கள் தங்க அட்டை ஒன்றை விற்பனை செய்ய இருக்கிறோம். க்ரீன் கார்டு போல இது கோல்டு கார்டு. இந்த அட்டைக்கு நாங்கள் 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு படி ரூ.43 கோடி) என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் இருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்றார்.
இதற்கு காங்கிரசின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தனது நிர்வாகத்துக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:– இது குடியுரிமைக்கான ஒரு வழியாகும். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். அவர்கள் இங்கே வசதியுடனும், வெற்றிகரமாகவும் இருப்பார்கள். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள், நிறைய வரி செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள். கோல்டு கார்டு விற்பனை இரண்டு வாரங்களில் துவங்கும். இதை செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது.
அமெரிக்காவில் குடியேறும் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து கிரீன் கார்டுகளைப் பெற அனுமதிக்கும் தற்போதைய EB-5 என்ற திட்டத்துக்கு இது மாற்றாக இருக்கும் என்றார்.