செய்திகள்

அமெரிக்காவில் ‘எச் – 1 பி’ விசாவுடன் ஒருவர் பணியாற்றினால் இருவருக்கும் வேலை

வாஷிங்டன், மே. 16–

அமெரிக்காவில், ‘எச் – 1 பி’ விசாவுடன் கணவன் பணியாற்றினால் மனைவிக்கு வேலை, மனைவி பணியாற்றினால் கணவனுக்கு வேலை என்னும் திட்டத்திற்கு ‘கூகுள்’ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச் – 1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவால் அதிக அளவிலான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த விசாவுடன் பணியாற்றுவோரின் மனைவி அல்லது கணவரும், அமெரிக்காவில் வேலை பார்க்க, எச் – 4 என்ற விசா வழங்கப்பட்டு வந்தது. அமெரிக்க இளைஞர்களின் வேலை வாய்ப்பு கருதி, கடந்தாண்டு அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், எச் – 1 பி, எச் – 4 உள்ளிட்ட விசாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். விசா வினியோகித்தை நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் அதிபராக பதவியேற்ற ஜோ பிடன், டிரம்பின் அந்த உத்தரவை ரத்து செய்தார். இந்நிலையில், எச் – 1 பி விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி வழங்கும் இந்த திட்டத்திற்கு, கூகுள் தலைமையிலான 30க்கும் மேற்பட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

‘அடோப், அமேசான், ஆப்பிள், இ மே, ஐ.பி.எம்., இன்டெல், மைக்ரோசாப்ட், டுவிட்டர்’ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது குறித்து கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கருத்து தெரிவிக்கையில், ‘‘அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வருவோருக்கு ஆதரவு அளிப்பதில் கூகுள் பெருமை அடைகிறது. எச் – 1 பி விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைவிகளுக்கு பணி வழங்கும் இந்த திட்டத்திற்கு ஆதரவாக, கூகுள் நிறுவனத்துடன் 30 நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளன. இந்த திட்டத்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும். பல குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும்’’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *