அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
வாஷிங்டன், மே 5–
பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டை சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழுக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக டிரம்ப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த உத்தரவு வரும் 9ம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள 19 நாடுகளில் 10 ஆப்பிரிக்காவில் உள்ளன. அவற்றில் 9 நாடுகள் கறுப்பின ஆப்பிரிக்க மக்கள் வாழும் நாடுகள் ஆகும்.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் குழுவை சர்வதேச பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் ஆயுதக் குழுக்கள் செயல்படும் நாடுகள் மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வருகை தந்து சட்டவிரோதமாக அங்கேயே தங்கும் நாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்திருந்தார். ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர் தடை விதித்திருந்தார். இந்தத் தடை உத்தரவை ஜோ பைடன் 2021ம் ஆண்டு நீக்கி உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
![]()





