செய்திகள்

அமீரகத்தில் 3 முதல் 17 வயது குழந்தைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி

துபாய், ஆக. 3-

900 சிறுவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையையடுத்து, அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமியருக்கு சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் மக்கள் தங்களை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சினோபார்ம், அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் வி போன்ற பல்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அங்கு 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கும் கொரோனா தடுப்பூசியானது போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகளால் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீரகத்தில் 3 வயது நிறைவடைந்த குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

900 குழந்தைகளிடம் பரிசோதனை:

இந்த அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 3 வயது முதல் 17 வயதுடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் எந்த அளவில் நோய் எதிர்ப்புத்தன்மையை கூட்டுகிறது? என்பது குறித்து ஆய்வு செய்யும் பணிகளானது தொடங்கியது. 900 சிறுவர், சிறுமிகளிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது.

3-17 வயதுடையவர்களுக்கு அனுமதி

ஆய்வுக்காக தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்த குழந்தைகள் கடந்த ஜூன் மாதம் முதல் கண்காணிக்கப்பட்டு வரப்பட்ட நிலையில் ஓவ்வொருவரின் தனிப்பட்ட நோய் எதிர்ப்புத்தன்மை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.

தற்போது இந்த ஆய்வின் முடிவில், அவசர பயன்பாடு மற்றும் உள்நாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *