செய்திகள்

அமித் ஷா பேச்சால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை

கோபம் இல்லை–என் குரலே அப்படித்தான்; இது தயாரிப்பு நிலையில் ஏற்பட்ட குறைபாடு

டெல்லி, ஏப்.5–

இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா விவாதத்தின் போது பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தமாக பேசிய நிலையில், எனது குரலே அப்படித்தான் எனவும் இது எனது “manufacturing defect” என கூறியதால் நாடாளுமன்றத்தில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை கடந்த வாரம் இந்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டமானால் இந்தியாவில் சிறைக் கைதிகள், குற்றவாளிகளின் அடையாளம் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

தயாரிப்பில் குறைபாடு

இந்த மசோதா மீதான விவாதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார். இந்த மசோதாவை திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து பேசின. எதிர்கட்சிகள் கடுமையான வாதங்களை முன்வைத்த நிலையில், அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “குற்ற விசாரணையை மிகவும் திறமையாகவும் விரைவாகவும் செய்யவே” இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மசோதா மீதான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அச்சத்தைப் போக்க தான் விரும்புவதாகவும் அமித் ஷா கூறினார். அப்போது, மக்களவை உறுப்பினர் தாதா கூறிய கருத்துக்கு பதில் அளித்த அமித் ஷா, கோபமான தொனியில் பதிலளித்தார் என, திரிணாமுல் கட்சி உறுப்பினர் கூறினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “என் குரல் ஹை பிட்சாக இருந்தது, நான் என்ன செய்ய… என் குரலே அப்படித்தான், இது “manufacturing defect” (அதாவது எந்திரங்களில் சில, தயாரிப்பு நிலையிலேயே குறைபாடுடன் வரும் அதைப் போல) என்றார். மேலும் நான் கோபப்படுவதில்லை என்றும் கூறினார். அமித் ஷா இப்படி பேசியதால் நாடாளுமன்ற அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published.