நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை தடுத்து நிறுத்திய பாஜக எம்.பி.க்கள்
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்.பி. மண்டை உடைந்தது
புதுடெல்லி, டிச. 19–
அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சை ஆக்குவதாக கூறி பாஜகவும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை பாஜக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்… அம்பேத்கர்…’ என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் உச்சரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” எனப் பேசினார்.
மாநிலங்களவையில் அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை அமித் ஷா தெரிவித்ததாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
2 வது நாளாக காங்கிரஸ் போராட்டம்
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து 2வது நாளாக அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்று அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். எதிர்க்கட்சி எம்பிக்கள் நீல நிற ஆடை அணிந்து, அம்பேதகர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாகச் சென்றனர். பேரணி மகா திவாரை அடைந்தவுடன் நுழைவு வாயில் சுவரின் மீது ஏறி சில எம்பிக்கள் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர்.
அப்போது, நுழைவு வாயிலில் அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.
இது தள்ளுமுள்ளாக மாறிய நிலையில், பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக உறுப்பினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது ராகுல் தள்ளிய ஒரு எம்பி தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சந்திர சாரங்கி தெரிவித்தார்.
ராகுல் காந்தி
இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:
”உங்கள் கேமிராக்களிலேயே இந்த சம்பவம் பதிவாகியிருக்கும். நான் நாடாளுமன்ற வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். அப்போது, பாஜக எம்பிக்கள் என்னை வழிமறித்து தள்ளினார்கள், மிரட்டல் விடுத்தார்கள். அதனால்தான் இது நடந்தது.
தள்ளுமுள்ளு நடந்தது உண்மைதான். இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஆனால், இது நுழைவு வாயில், உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. அரசியலமைப்பை தாக்குவதும் அம்பேத்கரை அவமதிப்பதுமே முக்கிய பிரச்னை” என்றார்.
பாஜக போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் திரண்ட பாஜக எம்.பி.க்கள், ‘பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். ஆனால் காங்கிரஸ் தவறான பாதையில் இட்டுச்சென்றது’ என்ற பதாகைகளை ஏந்தியபடி காங்கிரசை குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், “காங்கிரஸ் குடும்பத்தினர் தங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டனர். ஆனால் அம்பேத்கருக்கு அவர்கள் வழங்கவில்லை. அமித் ஷா பேச்சை காங்கிரஸ் திரித்துப் பேசுகிறது. அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது பாஜக அரசு தான். அமித் ஷா பேச்சை அரசியலாக்கி அதன்மூலம் பலன் அடையும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது” என்றார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மேலும், மக்களவையில், “ஜெய் பீம், ஜெய் பீம்” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கமிட்டனர். மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கரின் புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்டினார்.
இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவையை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.