சென்னை, டிச. 18–
பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார்.
மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆனால், மத்திய அமைச்சர் அமித்ஷா பெயரைக் குறிப்பிடாமல், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்..
அதில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.
அம்பேத்கரை அவமதித்ததற்காக நாட்டு மக்களிடம் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.