சிறுகதை

அமாவாசை | ராஜா செல்லமுத்து

அமாவாசை அமாவாசை அன்று தன் அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டு, காக்கைக்கு சோறு படைப்பது மதனுக்கு வழக்கம்.

இந்த மாதம் அமாவாசை அன்றும் அவன் மொட்டை மாடியில் காகத்திற்கு அறுசுவை விருந்து படைத்து கா கா கா என்று காக்கையை வரவழைத்துக் கொண்டு இருந்தான்.

அவன் கத்தும் குரலைக் கேட்டு எந்த காக்கையும் வரவில்லை. அவன் தொண்டை வலிக்க காக்கா என்று திசைகளை திரும்பித் திரும்பிப் பார்த்து கத்திக்கொண்டே இருந்தான். எந்த காக்கையும் அவனை கண்டு கொள்ளவே இல்லை

“என்ன இன்னைக்கும் ஒரு காக்கையும் வரமாட்டேங்குது என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவன், மறுபடியும் மறுபடியும் திசைகள் பார்த்து கத்திக் கொண்டே இருந்தான்.

கீழ் வீட்டில் இருந்த மனைவி சகுந்தலா மேலே வந்து

என்னங்க இன்னைக்கும் ஒரு காக்காவும் வரலையா? என்று அவள் கேட்டு வைத்தாள்.

இல்ல என்னமோ தெரியல இன்னைக்கும் ஒரு காக்கையும் வரலையே என்ற மதன் மறுபடியும் கத்த ஆரம்பித்தான்.

மதனின் மனைவி சகுந்தலாவும் கா கா என்று கத்த ஆரம்பித்தாள்.ஒரு காக்கையும் வந்தபாடில்லை. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் தலையில் அடித்துக்கொண்டு படிகளில் கீழே இறங்கினார் .

துணி காயப்போட வந்த அவரின் மனைவி மதன், மதன் மனைவியின் செய்கையை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் உள்ளூர கவலை ஊறியது. அவளும் அந்த வினோத வேடிக்கை பார்த்துக் கொண்டே கீழே இறங்கினாள். பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

பார்த்தியா ? இருக்கிற போது அந்த கிழவிக்கு ஒரு வாய் சோறு கொடுக்காம , பட்டினியா கிடந்து செத்து போச்சு. ஆனா இன்னைக்கு பாரு செத்ததுக்கு அப்புறம், காக்காக்கு படையல் போட்டுக்கிட்டு இருக்காங்க. என்ன உலகம் இது? என்று அந்த பக்கத்து வீட்டுக்கார்கள் பேசிக்கொண்டார்கள்.

ஆமா உண்மைதான். அந்த கிழவி டீயும் பன்னும் சாப்பிட்டு உடல் குறைஞ்சு போச்சு . ஒரே வீட்டில் இருந்தாலும் மருமகள் படுத்துற பாடு இருக்கே. சொல்லி மாளாது, மகன் போகும் போது ஒரு எத்து – வர்ற போது ஒரு எத்து – அப்படின்னு அந்த அம்மா அவ்வளவு கொடுமை படுத்துவாங்க. அந்தத் தாய் தகப்பன் சம்பாரிச்சு வச்ச சொத்துலிருந்துகிட்டு அந்த தாய் எவ்வளவு அலைய விட்டாங்க. இன்னைக்கு செத்துப் போச்சு; செத்துப் போயி நாளாச்சு. ஆனா வாழும்போது ஒரு வாய் சோறு கொடுத்து காப்பாற்ற, இந்த மனுஷங்க செத்த பிறகு காக்கைக்கு படையல் போட்டு என்ன பிரயோஜனம் ?அதனாலதான் எந்த காக்கையும் வரமாட்டேங்குது போல.

ஆமாங்க நானும் ஒவ்வொரு மாசமும் பார்த்துட்டு தான் இருக்கேன். இவங்க கத்திக்கிட்டே போறாங்க. எந்த காக்கையும் வந்து சாப்பிட்டதா தெரியல . அதுதான் உண்மையான ஆத்மா. இவங்க படுத்தின பாட பார்த்துட்டுதான் காக்காவுல இருக்கிற அம்மா வந்து சாப்பிடலன்னு நினைக்கிறேன்.இது அவங்களுக்கு தெரியுமோ தெரியாதோ ?

ஆனா கொஞ்சம் கூட ஈரம் இல்லாத அந்த மனுஷங்களோட சாப்பாட்டை சாப்பிட கூடாதுன்னு தான் காக்கா கூட வர மாட்டேங்குது .

என்ன செய்ய … ஆயிரம் பட்டாலும் கேட்டாலும் இந்த மனுசங்க மட்டும் மனசு இன்னும் மாறவே இல்ல. எப்ப மாறுவாங்கன்னு தெரியல என்று பக்கத்துவீட்டு நபர்கள் பேசிக்கொண்டது மதனுக்கும் மனைவி சகுந்தலாவுக்கு கேட்க ஞாயம் இல்லைதான்.

ஆனால் அவர்களின் செயலை அவர்கள் அத்தனையும் அறிந்தவர்கள்.

படையல் சாதத்தை மாடியில் வைத்துக்கொண்டு மதன் ஒருபுறம் கத்திக் கொண்டிருந்தான். சகுந்தலாவும் கத்திக் கொண்டிருந்தாள்.

காகம் வருவதாக தெரியவில்லை.

அவர்கள் குரல் மட்டும் ஏதோ ஒரு பாவத்தை போக்குவதாக இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *