அன்று வானம் முழுவதும் இருள். ஆங்காங்கே சில நட்சத்திரங்களுடன் நிலா.
அன்று நிறைந்த அமாவாசை .அந்த அமாவாசை அன்று இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதும் திதி கொடுப்பதும் யாருக்காவது தானம் கொடுப்பதும் சிறந்தது என்று கோயில்கள் நீர்நிலைகள் உள்ள எல்லா இடங்களிலும் நிரம்பி வழிந்தார்கள் ஆட்கள்.
“இறந்தவர்களுக்கு திதி கொடுத்துட்டு அப்படியே நாலு அஞ்சு பேருக்கு சாப்பாடு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் .பெரியவங்களோட ஆசிர்வாதம் பூரணமா கிடைக்கும் ” என்று ஒரு ஜோசியர் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அன்று கோயிலில் இறந்து போன தகப்பனுக்கு திதி கொடுத்துவிட்டு யாசகம் கேட்பவர்களுக்கு ஐந்து ஆறு உணவு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான் நவநீதகிருஷ்ணன்.
அவன் மனம் முழுவதும் இறந்து போன தன் அப்பாவை அருகில் அழைத்து வந்து சாப்பாடு போடுவதாய் ஒரு உணர்வு .எப்படியும் இறந்து போன அப்பாவுடைய ஆத்மா நம்மளப் பாக்கும். முன்ன இருந்தத விட நாம ஒசந்த இடத்துக்கு போயிருவோம்” என்ற நம்பிக்கையோடு உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு இதை யாருக்கு கொடுப்பது என்று தேடிக் கொண்டிருந்தான்.
தரிசனம் செய்த கோயிலைத் தாண்டி சின்னப் பூங்கா இருந்தது. அங்கு வரிசையாக ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருத்தர் இடத்திலும் உணவுப் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில பிளாஸ்டிக் டப்பாக்கள். சில பேப்பரில் பொதிந்து என்று விதவிதமாக அன்று வந்த உணவை அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். இதைப் பார்த்த நவநீதகிருஷ்ணனுக்கு என்னவோ போலானது.
” என்ன இது ? அமாவாசை அன்னைக்கு உணவு கொடுக்கிறது நல்லதுன்னா இவங்க எல்லாத்தையும் வாங்கி வச்சிருக்காங்க. இவங்க கிட்ட எப்படி கொடுக்கிறது? ” என்று யோசித்த நவநீதகிருஷ்ணனை பார்த்த ஒரு பெண்
“தம்பி இறந்து போனவங்களுக்கு தர்ப்பணம் கொடுத்துட்டு சாப்பாடு கொடுக்க வந்து இருக்கீங்களா? இங்க வாங்க உணவ குடுத்துட்டு போங்க .அதுக்கு தான் நாங்க உட்கார்ந்து இருக்கிறோம்” என்று அந்தப் பெண் சொல்ல நவநீதகிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
” நாம உணவு கொடுக்கிறோம்னு இந்த அம்மாவுக்கு எப்படி தெரியும்? எதுக்கு இப்படி கேக்குது? ” என்று நினைத்தவன்
” அம்மா இந்தாங்க ” என்று அங்கிருந்த நான்கு ஐந்து பேருக்கு கொண்டு வந்த உணவை கொடுத்தான். இது என்ன பெரிய வியாபாரமாக இருக்கும் போல. எல்லா சாப்பாட்டையும் வாங்கி வச்சிருக்காங்க. இதெல்லாம் என்ன பண்ணுவாங்க?”
என்று யோசித்துக் கொண்டிருந்தான். சரி பரவால்ல நாம கொடுக்க வேண்டியது கடமை அது கடவுளுக்கு தான் வெளிச்சம் என்று சொல்லியபடியே அமாவாசை கடனை முடித்து விட்டோம் என்ற திருப்தியில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் நவநீத கிருஷ்ணன். அந்தப் பூங்காவை சுற்றியுள்ள அந்த மனிதர்கள் அன்று அமாவாசைத் தர்ப்பணம் செய்த எல்லா ஆட்களிடமும் உணவை வாங்கி குவித்து வைத்திருந்தார்கள். அந்த வழியாக போன அழகிரிக்கு இது வியப்பாக இருந்தது.
” என்ன இது இவ்வளவு சாப்பாடு வாங்கி குவிச்சு வச்சிருக்காங்க. என்று வியப்பாக பார்க்க அந்த பெண்
“தம்பி பசிக்குதா ? ஏன் இப்படி சாப்பாட்ட பாக்குறிங்க? என்று கேட்க
இல்லம்மா நான் சும்மா பாத்தேன் என்று சொல்லி அவன் அந்த இடத்தை விட்டு நழுவினான் .அன்று அமாவாசை முடிவதற்குள் அங்கிருந்து ஆட்களிடம் உணவு பொட்டலங்கள் மலை போல் குவிந்தன .அதையெல்லாம் அள்ளிக் கொண்டு வேறு இடத்திற்கு விரைந்தார்கள் உணவு வாங்கியவர்கள் . அந்த உணவை வாங்கியவர்களில் ஜெயந்தி தான் தலைவி. ஒவ்வொரு அமாவாசை அன்றும் அங்கே அமர்ந்து வாங்கிய உணவுகள் அத்தனையும் சேர்த்துக்கொண்டு ஒரு ஆட்டோவை எடுத்து விரைத்தார்கள். அவர்கள் சென்றது ஆதரவற்றவர் இல்லம் .
ஜெயந்தி அம்மா வந்துட்டாங்க ஜெயந்தி அம்மா வந்துட்டாங்க என்று குதித்தனர் குழந்தைகள். உணவுகளை அள்ளிக் கொண்டு ஆதரவற்ற அந்த இல்லத்திற்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த அத்தனை ஆதரவற்ற குழந்தைகளும்
” நீங்க எப்ப வருவீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்; ரொம்ப பசிக்குது ” என்று ஆவலாகச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
” சாப்பிட்டுட்டு இருங்க. நாங்க திரும்ப வாரோம் ” என்று சொல்லிய ஜெயந்தி மற்றும் அவரது தோழிகள் மறுபடியும் அந்தப் பூங்காவிற்கு வெளியே வந்து அமர்ந்தார்கள்.
” அம்மா நீங்க ஒவ்வொரு அமாவாசைக்கும் இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்களே ? இது தப்பு இல்லையா? இதே வேலையா தான் இருக்கீங்களா ? ” என்று ஒருவன் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் இருந்தனர், ஜெயந்தி உட்பட்ட பெண்கள்.
ஜெயந்தி அம்மா எப்போது வருவார்கள்? என்று காத்துக் கொண்டிருந்தார்கள் அந்த ஆதரவற்ற இல்லத்தின் குழந்தைகள்.