பெங்களூரு, ஜூலை 23–
அமலாக்கத் துறையை கண்டித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் சட்டமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார். மேலும் அந்த ஊழலுக்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்.ஜி.சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு ரூ.14.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் நாகேந்திரா, ரெய்ச்சூர் காங்கிரஸ் எம்எல்ஏவும், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவருமான பசனகவுடா தட்டல், நாகேந்திராவின் உதவியாளர் ஹரீஷ் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நாகேந்திராவை கைது செய்தனர்.
இந்த ஊழல் விவகாரம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என மாநில அரசு அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததற்காக அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் இருவர் மீது கர்நாடக அரசு சார்பில் வழக்குப் பதியப்பட்டது. சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநர் கல்லேஷ் பி அளித்த புகாரின் அடிப்படையில், வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் 2 அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையாவை சிக்க வைக்க வேண்டும் என அமலாக்கத் துறை செயல்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக மாநில சட்டமன்ற கட்டிடமான விதான் சவுதாவுக்கு வெளியே உள்ள காந்தி சிலை அருகே சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “சமூக நலத்துறை உதவி இயக்குநரை ஊழல் விவகாரத்தில் முதல்வருக்கு சம்பந்தம் இருப்பதாக கூறச் சொல்லி வற்புறுத்திய அமலாக்கத் துறைக்கு எதிராக இன்று அமைச்சர்கள் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி வருகிறோம். சமூக நலத்துறை ஊழல் வழக்கை பொறுத்தவரை சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக அமைச்சரே ராஜினாமா செய்தார். மேலும், சிறப்பு விசாரணைக் குழு ஏற்கனவே 50% தொகையை மீட்டுள்ளதுடன், நிறைய பேரை கைது செய்துள்ளது.
இப்போது அமலாக்கத் துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அமலாக்கத் துறை அதிகாரிகள், சமூக நலத்துறை உதவி இயக்குநரை வற்புறுத்தி, இந்த வழக்கில் முதல்வர் சம்மந்தப்பட்டுள்ளார் எனக் கூறவைக்க முயன்றுவருகிறது. அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளால் நான் குறிவைக்கப்பட்டேன். என்னைப் போன்றவர்களை சிபிஐ துன்புறுத்துகிறது. என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டம் தன் கடமையை செய்யட்டும். விசாரணையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் தொடர்பாக சட்டசபையில் விவாதிப்போம்.” என்று தெரிவித்தார்.
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், “கர்நாடகாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மீது பாஜக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது. அமலாக்கத் துறை அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் தொடர்பில்லாத ஊழல்களில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரைக் கூறுமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.