செய்திகள்

அமலாக்கத்துறை விசாரணை

Makkal Kural Official

சென்னை, மே 17–

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைக்கு அமைச்சர் முத்துசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை; அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அரசு அலுவலர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

நேற்றிரவு விசாரணை முடிவடைந்து விசாகன் அமலாக்கத்துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார். இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் அழைத்து சென்றனர்

இதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும், மின்வாரிய முன்னாள் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன் வீடு மற்றும் அலுவலகத்திலும், சூளைமேட்டில் உள்ள வீடு, அண்ணா நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம், பெசன்ட் நகர் பகுதியில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனை மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். நேற்று விசாகனை அழைத்து சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.

அமைச்சர் முத்துசாமி

கடும் கண்டனம்

அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத் துறை நடவடிக்கைகளை சட்டப்படி சந்திப்போம் என்று வீட்டுவசதி, மதுவிலக்கு துறை அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சு. முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்ற அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.

இந்த சோதனைகளின் போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனைகளின் போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத் துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.

சட்டப்பூர்வ நடவடிக்கை

பல அமலாக்கத் துறை வழக்குகளில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபர் ஓட்டம்:

வீட்டுக்கு சீல் வைப்பு

அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வந்திருப்பதை அறிந்து தப்பியோடிய தொழிலதிபர் ரத்தீஷின் சென்னை எம்.ஆர்.சி., நகர் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டருகே துாக்கி வீசப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், தொழில் அதிபர் ரத்தீஷ் உடன், டாஸ்மாக் மதுக்கூடம் டெண்டர் தொடர்பாக, ‘வாட்ஸாப் சாட்டிங்’ செய்யப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.இந்த ரத்தீஷ், துணை முதல்வர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதை விசாரித்து அறிந்து கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி., நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரத்தீஷ் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சென்றனர். ஆனால், அமலாக்கத்துறை வருவதை அறிந்த அவர் ஓட்டம் பிடித்து விட்டார். எனினும் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இன்றும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், ரித்தீஷ் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். வீட்டில் உள்ள பணம், நகை, ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *