செய்திகள்

அமலாக்கத்துறை முன் 4வது தடவையாக சோனியா மருமகன் நேரில் ஆஜர்

ஜெய்ப்பூர், பிப். 12–

ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, தன் தாயுடன் இன்று ஆஜரானார்.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராஜஸ்தான் பிகானிரில், வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனம், 2015ல், மிகவும் குறைந்த விலையில், நிலங்களை வாங்கியுள்ளது. பின், அதிக விலைக்கு, அந்த நிலம், ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, 3 முறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியும், வாத்ரா ஆஜராகவில்லை. ‘இந்த வழக்கில், வாத்ராவும் அவரது தாய், மவ்ரீனும், அமலாக்க துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

அதன்படி, ஜெயப்பூரில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், வாத்ரா மற்றும் அவரது தாய் மவ்ரீன் இன்று ஆஜரானார். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை முன் வாத்ரா ஆஜராவது இது 4வது முறையாகும்.

முன்னதாக, வெளிநாடுகளில் சொத்து வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, வாத்ராவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள், சமீபத்தில், 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *