சென்னை, பிப்.22-
தனது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது அதிகார துஷ்பிரயோகம் என்றும், இந்த நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்வேன் என்றும் இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் கதை விவகாரத்தில், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமலாக்கத்தறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கியது. இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘எந்திரன்’ கதை உரிமம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே ஐகோர்ட்டால் முழுமையாக தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. இரு தரப்பினரின் ஆதாரங்களையும் மிக கவனமாக ஆராய்ந்து ஆருர் தமிழ்நாடன் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இந்த தெளிவான தீர்ப்பு இருந்தபோதிலும், அமலாக்கத்துறை, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஐகோர்ட்டின் தீர்ப்பை புறக்கணித்து, எனது சொத்துகளை முடக்கியுள்ளது. இந்த சட்ட செயல்முறையானது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். இந்த நடவடிக்கையால் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன்.
அசையா சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக இன்று வரையில் அமலாக்கத்துறையிடம் இருந்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. ஆனால் அதற்கு முன்பே சொத்துகள் முடக்கப்பட்டதாக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டுவிட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து, இந்த விஷயத்தில் மேலும் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவ்வாறு நடவடிக்கை எடுக்கதவறினால், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.