செய்திகள்

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ஜார்க்கண்ட் ஐகோர்ட் செல்ல அறிவுரை

புதுடெல்லி, பிப்.2

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.

ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனிடம் நேற்று முன் தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தி பின் அவர் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.

அதேவேளை, கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. ஆனால் ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் உத்தியை மாற்றி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில ஐகோர்ட்டை அணுகியிருக்கலாமே? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.

அதற்கு ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான கபில் சிபல், முதல்வர் தொடர்பான பிரச்சினை என்பதால் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம் என்றார்.

அதற்கு நீதிமன்றங்கள் அனைவருக்கு திறந்திருக்கும். சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு நீதிமன்றம். ஹேமந்த் சோரன் தொடர்பான மனுவை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. மேலும், அமலாக்கத்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் முறையீடு செய்ய அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட்ட வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் ஹேமந்த் சோரனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜார்கண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹேமந்த் சோரன் ஒரு நாள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *