சென்னை, செப். 30–
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சரான பிறகு இன்று அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று 2வது நாளாக கையெழுத்திட்டார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சமயத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற செய்யப்பட்ட வழக்கில் திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். சுமார்15 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி கோர்ட் நிபந்தனைபடி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
இந்நிலையில் மீண்டும் அமைச்சராக செந்தில்பாலாஜி பொறுப்பேற்று கொண்டார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நிபந்தனையின்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜி கையெழுத்திடுவதற்காக இன்று 2வது முறையாக வந்துள்ளார். அமைச்சராக பதவியேற்ற பிறகு அமலாக்கத்துறை அலுலவகத்திற்கு முதல் முறையாக செந்தில் பாலாஜி கையெழுத்திட வந்து இருக்கிறார். அப்போது அவர் தனது சொந்த காரில் வந்து சென்றார்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.