சிறுகதை

அப்பா எடுத்த முடிவு–ஆவடி ரமேஷ்குமார்

மளிகை கடைக்கு சோப்பு வாங்க வந்திருந்தாள் ரஞ்சனி. பக்கத்திலிருந்த காய்கறி கடையில் கோமதியம்மாவும் பார்வதியம்மாவும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருப்பது தன் அப்பா எடுத்த முடிவைப் பற்றி என்று அறிந்ததும் உன்னிப்பாய் அவர்களின் பேச்சைக் கேட்க தொடங்கினாள். ரஞ்சனியை அவர்கள் கவனித்ததாக தெரியவில்லை. அவர்கள் இருவரும் ரஞ்சனியின் வீட்டிற்கு எதிர் வீடுகளில் குடியிருப்பவர்கள்.” ரஞ்சனியோட அப்பனுக்கு புத்தியே இல்ல கோமதி. ரஞ்சனி காலேஜ்ல படிக்கிற பொண்ணுனு அந்தாளுக்கு தெரியாதா? அவர் வீட்டு மேல் மாடில குடிவைக்க வேற ஆளுகளே கிடைக்கலியா…போயும் போயும் கல்யாணமாகாத தடிப்பசங்க நாலு பேர் தான் கிடைச்சாங்களா?

பஞ்சையும் நெருப்பையும் பக்கம் பக்கம் வைக்கலாமா? எனக்கென்னவோ அந்தாளு திட்டம் போட்டுத்தான் அவனுகளை மேல் மாடில குடி வச்சிருப்பார்னு சந்தேகம் வருது”

” அதே சந்தேகம் தான் பார்வதி எனக்கும்.இந்த ரஞ்சனியும் படிக்கிறா படிக்கிறா ரொம்ப வருஷமா படிக்கிறா.பெயிலாயி பெயிலாயி படிக்கிறாளோ என்னவோ…வயசு என்ன இருபத்தி நாலு இருக்குமா? …மாப்பிள்ளை ஒண்ணும் வரலை போல இருக்கு. அதான் நாலு பேர்ல ஒண்ணை செலக்ட் பண்ணட்டும்னு அவங்கப்பன் இந்த முடிவை எடுத்திருப்பான்னு நான் நெனைக்கிறேன்”அவர்களின் பேச்சுக்கள் ரஞ்சனியின் அடிவயிற்றில் தீயை உற்பத்தி செய்தது. இருந்தும் அமைதியாய் அவர்கள் பேச்சை செவிமடுத்தபடி சோப் வாங்க மறந்து நின்றாள். ” ரஞ்சனியோட அம்மாக்காரிக்காவது புத்தி வேண்டாமா…ச்சே!”

” அவ வேண்டாம்னு தான் சொல்லியிருப்பா. அவ புருஷன் தான், புது மெத்தேடுல மாப்பிள்ளை தேட போற திட்டத்தை விளக்கி சொல்லியிருப்பான். இவளும் அதை கேட்டுட்டு தலையாட்டிட்டா போல இருக்கு”

” ஆக ஆறு மாசத்துல ரஞ்சனியோட கல்யாணத்தை பார்க்க வாய்ப்பிருக்குனு சொல்லு!”சிரித்துக் கொண்டிருந்த அவர்களை மெல்ல நெருங்கினாள் ரஞ்சனி.” ஆன்ட்டீ!”

கோமதியம்மாள் உடனே திரும்பி பார்த்தாள்.அதிர்ந்தாள்.

” ர….ர…ரஞ்சனி?!”

” என்ன ஆன்ட்டி …அதிர்ச்சியா இருக்கா?!”

“அதிச்சியா…இ…இ…இல்……..லயே”

” சரி விடுங்க ஆன்ட்டி.நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிருந்த தை கால்மணி நேரமா கேட்டுட்டுத்தான் இருந்தேன்”.

பார்வதியம்மாள் அசடு வழிந்து,” அது வந்து ரஞ்சனி..”என்று ஏதோ சொல்ல வர, கோமதியம்மாள் கண்களால் ஏதோ ஜாடை செய்வதைப் பார்த்து அப்படியே மீதி வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

” சரிங்க ஆன்ட்டி. நீங்க உண்மை என்னனு தெரியாம ஏதேதோ அசிங்கமா பேசினீங்க. நான் மனநல மருத்துவத்துல டாக்டர் ஆகறதுக்காக படிக்கிறதால உங்க ரெண்டு பேருக்கும் புரியும்படி சொல்லிடறேன். எங்கப்பாவை ரொம்ப கீழ்த்தரமா எடை போட்டிருந்தீங்க. எங்கப்பா ஒரு கல்லூரி முதல்வரா இருந்து ரிடையர் ஆனவர்ங்கிறதை மறந்துட்டீங்களே..! நீங்க ரெண்டு பேரும் இதே ஏரியால இருபது வருஷத்துக்கும் மேல குடியிருக்கீங்க. எப்படி இப்படி தப்புதப்பா பேச மனசு வந்தது? நம்ம ஊரல இருக்கிற ஒரு பிரபலமான கல்லூரி முதலாளி எங்கப்பாவுக்கு நண்பர். அவருடைய கம்பெனிக்கு எங்கப்பா அடிக்கடி போவார். அந்த கம்பெனில நாலு பசங்களை புதுசா வேலைக்கு சேர்த்திருக்காங்க.

அந்த பசங்க வேற யாருமில்ல. அப்பாகிட்ட படிச்ச பசங்கதான்!அவங்ககிட்ட பேசிட்டிருந்த போது, அந்த வெளியூர் பசங்களுக்கு இந்த ஊர்ல வீடு யாரும் வாடகைக்கு கொடுக்கலையாம். ரொம்ப சிரமப்பட்டிட்டிருக்கிறதா புலம்பினாங்க. எங்க வீட்ல வாடகைக்கு விடற மாதிரி மேல் வீடு ஒண்ணு காலியா இருக்குது. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நம்பிக்கையான, கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லாத, நல்லா படிச்ச, நல்ல வேலையில இருக்கிற அந்த பசங்களுக்கு நாம் ஏன் மேல் வீட்டை வாடகைக்கு விட்டு உதவி செய்யக்கூடாதுனு என்கிட்டயும் எங்கம்மாகிட்டயும் அப்பா கேட்டாரு.

எங்க அனுமதியோட தான் வீட்டை வாடகைக்கு விட்டாரு.இன்னொன்னுங்க ஆன்ட்டி, நான் ஒண்ணும் பெண்கள் மட்டும் படிக்கிற பள்ளி, கல்லூரியில படிச்சவள் இல்லை. எல்கேஜியிலிருந்து கோ-எஜூகேசன் அதாவது பசங்களும் பெண்களும் ஒண்ணா சேர்ந்து படிக்கிற ஸ்கூல்,காலேஜ்ல தான் படிச்சேன், படிச்சிட்டும் இருக்கிறேன்.அதனால பசங்களோட பேசறதும் பழகறதும் எனக்கொன்னும் புதுசு இல்ல; பயமும் இல்ல. அதுவுமில்லாம நான் அடுத்த வருஷம் ஒரு மனநல மருத்துவரா ஆகப்போறேன். ஆண்களுக்கும் வைத்தியம் பார்க்க வேண்டி வரும்.நான் பெயிலாயி பெயிலாயி எல்லாம் படிக்கல.டாக்டர் ஆகறதுனா ரொம்ப வருஷம் படிக்கனும்.அதான்.எனக்கு ஏற்கனவே மாப்பிள்ளை ரெடியா இருக்கிறார் ஆன்ட்டி.யார் தெரியுங்களா…எங்க மாமா பையன் தான்! நீங்க ரெண்டு பேருமே அவரை அடிக்கடி பார்த்திருக்கீங்க.அவரும் ஒரு டாக்டர் தான்.அண்ணா நகர்ல ஹாஸ்பிடல் வச்சிருக்கார்.என் படிப்பு முடியட்டும்னு கல்யாணத்துக்கு வெயிட் பண்ணிட்டிருக்கார்.இப்ப சொல்லுங்க ஆன்ட்டி.எங்கப்பா எடுத்த முடிவு நல்லதா கெட்டதா?அசடு வழிந்தார்கள் இருவரும்.

” அம்மா ரஞ்சனி…வந்து…நாங்க பேசினது தப்பு தான்….உண்மை என்னனு தெரியாம..”

” எங்கப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணுங்கிறதால எனக்கு சகோதரப்பாசத்தை காட்ட நாலு அண்ணன்களை எங்கப்பா அடையாளம் காட்டியிருக்கார்…!அதைப்போயி..!”

” வந்து ரஞ்சனிக்கண்ணு…மன்னிச்சுக்கம்மா…உங்கப்பாவோட அருமை தெரியாம தப்பு தப்பா பேசிட்டோம்…நாங்க வரோம்” என்று சொல்லிவிட்டு நடையை கட்டினார்கள் அவர்கள் இருவரும்.

ஆவடி ரமேஷ்குமாரின் கதைகள்

நேசி | ஆவடி ரமேஷ்குமார்

பயம் | ஆவடி ரமேஷ்குமார்

சொக்கத்தங்கம் | ஆவடி ரமேஷ்குமார்

நியாயம் | ஆவடி ரமேஷ்குமார்

தண்டச்சோறு | ஆவடி ரமேஷ்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *