“ஏன்டா பரத், ரெண்டு நாளா கேட்டுக்கிட்டிருக்கேன். உன் பிறந்த நாளுக்கு என்ன வேணும்ன்னு?! உன்கிட்டேர்ந்து ஒரு பதிலும் வரலை! கேட்டதிலேர்ந்து ‘ரொம்ப டல்’லா வேற இருக்கே! ஸ்கூல்ல ஏதும் பிரச்னையா?”
“—————-?!”
“ஏய் பிரேமா. என்னடி இது? எது கேட்டாலும் அவன் ‘அமைதி’யாவே இருக்கான்! இப்பவும் பாரு இதைக் கேட்டுக்கிட்டு ‘உர்’ருன்னு முறைச்சிட்டுப் போறான்! உட்கிட்டேயாவது ஏதாவது சொன்னானா?!”
“நீங்க வேற, உங்ககிட்டேயாவது பேசறான்! என்கிட்டே அதுகூடக் கிடையாது! என்ன கேட்டாலும் பதில் சொல்லாதவன்கிட்டே என்னால கொஞ்சவும் முடியாது, கெஞ்சவும் முடியாது! போய் வேலையைப் பாருங்க! தானா வழிக்கு வருவான்!”
“ஆமாமா, ஒருத்தர் கிட்டயும் உனக்கு ‘அன்பா’ப் பேசத் தெரியாது! பிளஸ் டூ படிக்கிற பிள்ளை! தோளுக்கு மேல் வளர்ந்தவனாச்சேன்னு நினைக்காம, ஏதோ எதிரிகிட்டே மோதற மாதிரியே அவன்கிட்டே உன் திமிரைக் காட்டுவே!”
“இப்ப, என்ன செய்யணும்ங்கறீங்க?!”
“வாடி, அவனைச் சமாதானப் படுத்தலாம்!”
வேண்டா வெறுப்பாகக் கணவனுடன் அறைக்குள் நுழைந்தாள் பிரேமா.
“பரத், உனக்கு என்ன வேணும் சொல்லுடா! எதுவா இருந்தாலும் வாயைத் திறந்து பேசுடா!” என வித்யாதரன் கொஞ்சலாய் மகனிடம் கேட்டார்.
“டாடி, போன வருஷமும் என் பொறந்தநாளுக்கு இதே மாதிரிதான் கேட்டீங்க! சரின்னு ‘காப்பகத்தில இருக்கிற’ தாத்தா பாட்டியைக் கூட்டிக்கிட்டு வரணும்ன்னு சொன்னேன்! கூட்டிட்டு வந்தீங்க! ஆனா, பத்தே நாள்ல மறுபடியும் கூட்டிக்கிட்டுப் போய் அங்கேயே விட்டுட்டீங்க! அதுக்கப்புறம் மாசம் ஒரு முறை அவங்களைப் பார்க்கறதோட சரி! எனக்கு அவங்க இங்கேயே எப்பவும் வேணும்! அவங்களைக் கூட்டிக்கிட்டு வரணும், போதுமா?”
‘போதும் நிறுத்துடா! அது மட்டும் முடியாது!’ என்று வித்யாதரன் காட்டுக் கத்தலாய்க் கத்த, பிரேமாவும் ‘ஜால்ரா’ போட்டாள்!
‘அப்ப, எனக்கு ஒரு ‘பிராமிஸ்’ பண்ணுங்க!’ என்றான் பரத் கூலாக!
‘என்ன பிராமிஸ்?!’ என்றான் வித்யாதரன் செம கடுப்புடன்!
‘ நா படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி எனக்குக் ‘கல்யாணம்’ ஆனதும், நானும் இதே மாதிரி ‘உங்களையும், மம்மியையும்’ முதியோர் இல்லத்தில கொண்டு போய் விட்ருவேன்! அதுக்கு நீங்க ஒத்துக்கிட்டு எனக்குச் ‘சத்தியம்’ பண்ணிக் கொடுத்தாதான் இந்தப் பேச்சை இதோட நிறுத்துவேன்!’ என்று ஆக்ரோஷமாகக் கத்த –
வித்யாதரனும் பிரேமாவும் தீ சுட்டதுபோல் அதிர்ச்சியில் வார்த்தைகளை மொத்தமாய்த் தொலைத்தார்கள்!
திரும்பிப் பேச முடியாமல் அவர்கள் இருவரும் மௌனத்தைப் போர்த்தியபடியே தலை குனிந்து நகர –
பரத் தான் நகர்த்திய சதுரங்கக்காய் ‘வெற்றி’யைக் கொண்டு வரப் போவதை நினைத்து அவனுடைய அப்பாவையும் அம்மாவையும் பார்த்து ஒரு வீரப் பார்வை பார்த்தான்!
#சிறுகதை