….
செல்வி இன்று பெரிய பேச்சாளர். கதை .கவிதை. கட்டுரை என்று எது கொடுத்தாலும் வெளுத்து வாங்கி விடுவார் ஆசிரியர் தொழில் செய்து கொண்டிருக்கும் அவருக்குள் பன்முகத் திறமைகள் கொட்டிக் கிடப்பதாக உடன் பணி புரியும் ஆசிரியர்களும் அவளுடைய மேடைப்பேச்சைக் கேட்பவர்களும் சொல்வார்கள். அதிலும் ஓவியம், பாட்டு என்றால் அவளுக்கு உயிர். அவ்வளவு நேர்த்தியாக கதை சொல்வாள். தொடக்கத்தில் ஆரம்பிக்கும் அந்தக் கதையை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் விவரிக்கும் பாங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறுவார்கள் .
வழக்கம் போல ஒரு மேடைப்பேச்சு அழகாகக் கதை சொல்லிவிட்டு வெளியே வந்த செல்வியை இடைமறித்தார் ஒரு பெரியவர்.
” அம்மா, நான் உங்களது ஒவ்வொரு மேடையும் தவற விடுறதில்ல. எல்லா மேடைகளையும் நான் பாத்திருவேன். நீங்க கதை சொல்ற பாங்கு .கதை சொல்ற அழகு. அவ்வளவு நேர்த்தியா இருக்கு.இத எப்படி கத்துக்கிட்டீங்க? அதுவும் நீங்க ஒரு ஆசிரியர். இவ்வளோ அழகா உங்களால எப்படி கதை சொல்ல முடியுது. இதுக்கு பயிற்சி எதும் எடுத்தீங்களா? அப்படிங்கறத சொன்னா என்ன மாதிரியான ரசிகர்களுக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார் அந்தப் பெரியவர் .
பெரியவரைப் பார்த்த செல்வி சற்று சிரித்தாலும் அவர் கேட்கும் நியாயமான கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தாள்.
” ஐயா நீங்க கேட்ட கேள்விக்கு ரொம்ப நன்றி. இன்னைக்கு நான் எல்லா மேடைகள்ளயும் கதை சொல்றேன் .நல்லா பேசுறேன்னா அதுக்கு காரணம் எங்க அப்பா தான் . எங்க அப்பா எனக்கு கதை சொல்ல மாட்டார் “
என்று செல்வி சொன்னபோது அந்தப் பெரியவருக்கும் சுற்றி இருந்தவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது .
“என்னது கதை சொல்ல மாட்டாரா? கதை சொல்லாம எப்படி நீங்க இவ்ளோ அழகா கதை சொல்றீங்க?”
என்று வியப்பாக அங்கிருந்த ஒருவர் கேட்க ,கேள்வி கேட்ட பெரியவரும் ” ஆமா முதல்ல அதுக்கான காரணத்தச் சொல்லுங்க “
“சின்ன வயசுல எனக்கும் என் தம்பி சரவணனுக்கும் எங்க அப்பா கதை சொல்லுவார் . ஆனா, எனக்கு கதை சொல்ல மாட்டார் .என் தம்பிக்கு தான் சொல்லுவார். நான் பொண்ணு. என் தம்பி சின்னவன் அப்படிங்கறதுக்காக அவன் தூங்குறதுக்கு அடம்பிடிப்பான். அவன் தூங்குறதுக்காக கதை சொல்ல ஆரம்பிப்பார். கதை சொல்லிட்டு இருக்கும் போதே என் தம்பி தூங்கிடுவான். சரி அவன் தூங்கிட்டான்ல .அந்தக் கதைய எனக்கு சொல்லுங்கப்பா. அப்படின்னு நான் கேட்பேன் ஆனா அவரு சொல்ல மாட்டாரு. தூங்கிடுவாரு.
இப்படியே ஒவ்வொரு நாளும் எங்க அப்பா என் தம்பிக்கு கதை சொல்லும் போது, அவன் கதைய கேட்டுட்டு பாதிலேயே தூங்கிடுவான் மீதக் கதைய அப்பா சொல்ல மாட்டார். அந்த மீத கதை எப்படி இருக்கும்னு நானே கற்பனை செய்வேன். நானே கதைய வடிவமைப்பேன். அப்பா சொல்றது மாதிரி அந்தக் கதைய நானே உருவாக்குவேன். நானே பேசி பார்ப்பேன் .அப்படி ஒவ்வொரு நாளும் அப்பா சொல்லி பாதியில நிப்பாட்டுற கதைய எனக்கு நானே உருவாக்கி அதை முழுமைப்படுத்தி எழுதுவேன். இப்படி எங்க அப்பா, என் தம்பிக்கு கதை சொல்லி அதை பாதியிலே நிறுத்திட்டு, எனக்கு எதுவும் சொல்லாமல் விட்டதால தான் நான் கதை எழுத ஆரம்பிச்சேன். பேச ஆரம்பிச்சேன். இன்னைக்கு இப்படி இருக்கேன்” என்று சொன்னாள் செல்வி.
” என்னங்க ஆச்சரியமா இருக்கு. கதைய கேட்டு வளந்தவங்க தான் பேசுவாங்க. கதை சொல்லுவாங்கன்னா, கதையைக் கேட்காமல் வளர்ந்த செல்வி இவ்வளவு அழகா கதை சொல்றாங்களே? முரண்பாடா இருக்கே? “
என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்
“அடுத்த விழா கம்பன் கழகத்தில வருகிற மூணாம் தேதி.அங்க எல்லோரும் வந்துருங்க” என்று செல்வி சொல்ல,
“உங்க கதைய கேக்க எல்லாரும் ஆவலா இருக்கோம். கண்டிப்பா வந்திருவோம்” என்று சொன்னார்கள், பார்வையாளர்கள்.
“சரி எல்லாரும் வாங்க . சந்திக்கலாம்” என்று அனைவருக்கும் வணக்கம் சொல்லி, அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் செல்வி.
அப்பா சொல்லாத கதைகள் அவளுக்குள் ஆயிரமாயிரம் புதைந்து கிடக்கின்றன. எந்தக் கதையை எப்படிச் சொல்லலாம்? என்று யோசித்துக் கொண்டே பயணப்பட்டாள் செல்வி.