சிறுகதை

அப்பளம் | ராஜா செல்லமுத்து

“ரவிஷங்கர் சார் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க”

” ட்ரை தான் பண்ணிட்டு இருக்கீங்க”

“ஒங்களோட முயற்சிக்கு அளவே இல்லைங்க”

கடமைய செய், பலன எதிர் பாக்காதேன்னு சும்மா சொல்லலீங்க. என்னோட கடமைய நான் செஞ்சிட்டு

இருக்கேன் .பலன நான் எதிர் பாக்குறதே இல்ல .

ஒங்கள மாதிரி எல்லாரும் இருந்திட்டா போதுமுங்க. இங்க சிக்கலே இருக்காது.

இங்க எல்லாருமே ராத்திரி படுத்து எந்திரிச்சதுமே பெருதாகணும்னு நெனைக்கிறாங்க . அது அவங்களோட தப்பான நம்பிக்கை அம்புட்டுத்தான. ஆம்ஸ்ட்ராங் டீ குடிச்சிட்டு வருவமா?

“ஓ” தாராளமா?

“ஒண்ணு செய்யலாமா?’’

வேலைய முடிச்சிட்டு வந்து டீக் குடுப்பமே என்ற மூவரும் பிரதான சாலையிலுள்ள ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

மூவரும் படிகளில் மேலேறினார்கள். சுற்றிச்சுற்றிப்போன கட்டிடத்திற்குள் என்னப்பா இது இந்தக் கட்டிடத்திற்குள்ள இவ்வளவு ரூம்கள் இருக்கா?

வெளிய இருந்து பாத்தா எதுவும் தெரியமாட்டேங்குது. ஆனா உள்ள வந்து பாத்தா இவ்வளவு பெரிய ரூம்கள் இருக்கே என்ற ஆவலுடன் ஒரு ரூமுக்குள் நுழைந்தவர்களை சுவரில் விரிந்திருந்த வெள்ளைத்திரை வரவேற்றது.

அடேங்கப்பா இங்க இப்படியொரு திரையா?

ஆமா சார், இங்க தான் டெலிசீரிஸ் பிலிம் வேலை செஞ்சிட்டு இருக்கோம் என்று ஆம்ஸட்ராங் சொன்னார். அப்போது, ஏதாவது ஒரு படம் பாக்குறீங்களா? என்றேன்.

ஓகே என்ற ஒரு என்ஜீனியர் ஒரு டெலிசிரீயஸ் பிலிமத் திரையில் ஒட விட்டார்.

நீ உண்மையிலயே என்னைய லவ் பண்றியா?

“ஏன்… அத நான் ஒன்கிட்ட எத்தன தடவ சொல்றது. இல்ல திரும்ப கேட்டு உறுதி செஞ்சிட்டேன் என்று கதாநாயகனும் கதா நாயகியும் பேசிக்கொண்ட வீடியோ ஓடிக் கொண்டிருந்ததை மூவரும் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஆம்ஸ்ட்ராங்”

“எஸ் சார்”

பட்ஜெட் இல்லையா?

“ஆமா சார், இது டெலிபிலிம்தான அதான் என்று ஆம்ஸ்ட்ராங் சொல்ல, படம் ஓடிக்கொண்டே இருந்தது.

நல்லாயிருக்கே யாரு டைரக்டரு.

“நந்தினி”

“ஓ, அவங்களா நல்லா பண்ணியிருக்காங்க என்ற நலவிசாரிப்புகளுடன் அந்தப் படம் முடிந்தது.

பின்னர் அங்கு வந்த மராமத்து ஊழியர்களுடன் பேசிவிட்டு ஆம்ஸ்ட்ராங் இப்பவாவது டீ சாப்பிடலாமா? ஆமாங்க சாப்பிடலாம் என்ற மூவரும் அந்தக் கட்டிடத்தை விட்டு கீழே இறங்கினர். அறையினுள் குளிர்ந்து கொண்டிருந்த காற்று வெளியே வந்ததும் வெக்கையை கக்கியது.

உள்ள இருக்கும் போது, சொர்க்கம் மாதிரி இருக்கு. வெளிய வந்தா நரகாமா இருக்கு என்ற ரமேஷ் பொழுதைப் பற்றிப் புலம்பினார்.

எங்க டீ சாப்பிடலாம்.

இங்க பக்கதில சாப்பிடுவோமா?

வேணாம் சில் அவுட்ல சாப்பிடுவமே,

“ஓ.கே

நல்லாயிருக்குமா?

சில்அவுட்ல எப்பவும் டீ காபி நல்லாவே இருக்கும்ங்க என்ற மூவரும் சில் அவுட்டுக்குச் சென்றனர்.

கடையின் முன்பு காய்கறிகளைத் தொங்க விட்டு அந்தக் கடையே காய்கறிக்கடை போலவே இருந்தது . இது என்ன டீக்கடையா? இல்ல காய்கறிக்கடையா? இவ்வளவு தொங்க விட்டுருக்காணுக என்ற படியே மூணு லெமன்டீ என்ற ஆர்டரைக் கொடுத்துவிட்டு நின்றிருந்த போது,

‘‘அப்பளம், அப்பளம், அப்பளம் ’’என்ற படியே ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார்.

அவர் கையில் பையைத் தொங்கவிட்டிருந்தார். தொள தொளவென்ற சட்டை கலர்க் கதர்வேட்டி நெற்றியில் குங்குமக் கோடு கையில் பேப்பர் போட்டு மூடிய அப்பளக் கட்டு என அவரின் உடை நடை பாவனை என எல்லாமே வித்தியாசமாகவே இருந்தது.

“சார் அப்பளம் என்று அவர் எங்களை நெருங்கிய போது …

வேணாம் என்றான் ரமேஷ்

“சார் ஒண்ணு வாங்குங்க இத வாங்கிட்டு போயி நாங்க என்னங்க பண்ண …

அப்பளம்ங்க ….. இது ஒரிஜினல் உளுந்தில செஞ்சது. எல்லாம் கொழந்தைங்க செய்றா .மத்த அப்பளம் மாதிரி இதுல கலப்படம் எதுவும் இல்லீங்க. அவ்வளவும் கொழந்தைங்க தான் செய்றா. வாங்குங்கோ அந்தக் கொழந்தைங்களுக்கு ஒரு உதவியா இருக்குமே என்ற அந்தப் பெரியவர் சொன்னபோது…

ஒண்ணு குடுங்க என்றார் ஆம்ஸ்ட்ராங்.

இந்தாங்கோ என்று ஒரு கட்டைக் கொடுத்தார் அந்தப் பெரியவர்.

இதுல எத்தன அப்பளம் இருக்கு . இருபது அப்படின்னா இருபது இன்ட்டு நாலும் என்பது.

ஒரு அப்பளம் நாலுரூபாயா?

ஆமா தம்பி இந்த அப்பளம் ஒரிஜினல். நான் கூட ரிடையாடு டீச்சர். இத வித்து நான் ஏதும் பண்ணப் போறதில்ல .எல்லாம் ஒரு ஹெல்ப் தான் என்று அந்தப் பெரியவர் சொன்ன போது மூவரும் அந்தப் பெரியவரைப் பார்த்தனர்.

ரொம்ப நன்றி தம்பி என்ற பெரியவர் –

அப்பளம் அப்பளம் அப்பளம் என்று கூவ ஆரம்பித்தார்.

நான் இவ்வளவு பணம் போட்டு இந்த அப்பளத்தை வாங்கினது – அவரோட நம்பிக்கை கொலஞ்சு போயிரக் கூடாதுன்னு தான் . இந்த வயசிலயும் அவருக்கு என்ன நம்பிக்கைன்னு பாருங்க. அவரு விக்கிற அப்பளம் ஒடஞ்சு நொறுங்கிப் போயிரும் .ஆனா அவரோட நம்பிக்கை அப்படியில்ல என்று ஆம்ஸ்ட்ராங் சொன்ன போது,

அப்பளம் ….. அப்பளம் நல்ல தரமான அப்பளம் அப்பளம் என்ற அந்தப் பெரியவரின் குரல் தூரமாய்க் கேட்டுக் கொண்டிருந்தது.

அவரது குரல் என்னுள் புதிய நம்பிக்கையை விதைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *