சென்னை, ஜன 10–
‘ரோபோ’ உதவியுடன் சிறுநீரக புற்றுநோய் கட்டி நீக்க பகுதி அளவு சிறுநீரக அகற்றல் சிகிச்சையை சென்னையில் முதன்முறையாக அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
சிறுநீரகத்தின் முக்கியமான ரத்தநாளங்களுக்கு அருகே 5 செ.மீ. நீளமுள்ள புற்றுக் கட்டி இருந்த பங்களாதேஷை சேர்ந்த 40 வயதான நோயாளிக்கு இந்த சிக்கலான சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த புற்றுக்கட்டி இருந்த இடம், அறுவை சிகிச்சைக்கு அதிக சவாலான அமைவிடம் என்பதால், இந்த அறுவை சிகிச்சை மிகநுட்பமானதாக இருந்தது.
பங்களாதேஷில் பல்வேறு மருத்துவமனைகளில் இதற்கு முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனைகளில் சிறுநீரகத்தை முற்றிலுமாக அகற்றுகின்ற சிகிச்சையை மேற்கொள்ளுமாறு இவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த புதுமையான அறுவை சிகிச்சையானது சிறுநீரகத்தை அகற்றாமல் தக்க வைக்க உதவியது. அத்துடன், அறுவை சிகிச்சையின் இடர்களையும் பெரிதும் குறைத்து, வேகமாக குணம் பெறவும் உதவி இருக்கிறது.
அப்பல்லோ புரோட்டான் சிறுநீரகவியல் புற்றுநோயியல் துறை மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் முதுநிலை நிபுணரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் சிறப்பு நிபுணருமான டாக்டர் மாதவ் திவாரி குழுவினர் இதை வெற்றிகரமாக செய்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் துறையின் இயக்குனர் டாக்டர் ஹர்ஷத் ரெட்டி உடன் இருந்தார்.