செய்திகள் வர்த்தகம்

அப்பல்லோவில் புற்றுநோய்க் கட்டியை அகற்றும் ரோபோ

சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கினார்

சென்னை, ஜூலை.3–

புற்றுநோய்க் கட்டியை துல்லியமாகக் கண்டறிந்து அகற்றும் அதி நவீன ரோபோடிக் தொழில்நுட்ப சிகிச்சை முறை சென்னை அப்பல்லோ புரோட்டான் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

அதனை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

4ம் தலைமுறைத் தொழில்நுட்பத்திலான அந்த கருவிகள் மூலம் 360 டிகிரியிலும், அதாவது அனைத்து கோணங்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

கடந்த 38 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவத் துறையில் அப்பலோ பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. தற்போது, 4ம் தலைமுறை தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. சென்னை மருத்துவ தலைநகராக இருப்பதற்கு இத்தகைய பங்களிப்புகளும் ஒரு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்பல்லோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி பேசுகையில், வழக்கமான முறை சிகிச்சைகளுடனோ அல்லது லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளுடனோ ஒப்பிடும்போது ரோபோடிக் நுட்ப சிகிச்சையில் பல்வேறு சாதக அம்சங்கள் உள்ளன. தொண்டை, பெருங்குடல், சிறுநீரக மற்றும் கருப்பை போன்ற உறுப்புகளில் உருவாகும் புற்றுநோய்க்கு இதன் மூலம் துல்லிய சிகிச்சையை வழங்க முடியும் என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *