சிறுகதை

அபிஷேகப் பழம் | ராஜா செல்லமுத்து

உலகப்புகழ்பெற்ற ஒரு ஆலயத்தின் கீழே எண்ணற்ற வியாபாரக் கடைகள் குழுமிக் கிடந்தன. நெய், பழம், அபிஷேகம் பஞ்சாமிர்தம், தாம்பூலம் என்று எல்லாக் கடைகளும் அந்த ஆலயத்தை நம்பியே இருந்தன.

எல்லோருக்கும் அந்த இறைவன் இட்ட கட்டளைப்படியே வாழ்க்கை வாய்த்திருந்தது.

அத்தனை கடைகள் அங்கு கடைவிரித்திருந்தாலும் சுத்தநாதனின் கடை மட்டும் பிரபலம் அதற்குக்காரணம் சுத்தநாதனின் சுத்தம். இன்னொரு பக்கம் அவரின் பக்தி. இந்த இரண்டும் சேர்ந்தே இருந்ததால் சுத்தநாதன் வாழ்க்கையை ரொம்பவே உச்சத்தில் வைத்திருந்தான் அந்த இறைவன்.

அனுதினமும் அதிகாலை நாலுமணிக்கே கடைக்கு வந்துவிடும் சுத்தநாதனைப் பார்த்து அந்தப்பகுதிக் கடைக்காரர்களே ரொம்பவே பொறாமைப்படுவார்கள். சுத்தநாதனுக்கு கழுத்துக்கு மேலே சொத்துக்கள் கனத்துக் கிடந்தாலும் அவர் ஒரு போதும் சுகபோக வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளாமல் ரொம்பவே எளிமையாகவே வாழ்ந்து வந்தார்.

‘‘சுத்தநாதா..! அதான் கடவுள் இவ்வளவு குடுத்திருக்காரே.. அதை வச்சிட்டு அமைதியான வாழ்க்கை வாழாமல்.. இன்னும் இன்னும்னு ஏன்..? சம்பாரிக்கணும்னு ஆசப்பட்டு இந்த அதிகாலையிலேயே வர்றீங்க.. கொஞ்சம் ஓய்வு வேண்டாமா..? கொஞ்சம் வாழ்க்கையை அனுபவிங்க..’’ என்று ஒரு பெரிய மனிதர் சொல்லவும் அதைக் கேட்ட சுத்தநாதன் கடகடவெனச் சிரித்தார்.

‘‘அப்படியென்ன சொல்லிட்டேன்னு இப்பிடி சிரிக்கிறீங்க..’’ என அந்தப் பெரியவர் கேட்டார்.

‘‘நீங்க சொல்றது என்னவோ.. ரொம்ப வாஸ்த்தவனம் தான் பெரியவரே.. ஆனா..! இந்த ஆஸ்தி.. அந்தஸ்து.. சொத்து.. சுகம்மெல்லாம.. எப்பிடி வந்ததுன்னு நினைக்கிறீங்க..? எல்லாம் இந்த அதிகாலையில எழுந்திருச்சு கடவுளக் கும்பிடுறதுனால தான்..’’ என்று சொல்லியபடியே நிமிர்ந்து நின்ற கோபுரத்தைப் பார்த்து தலைக்கு மேலே கைகளைக் குவித்துச் சேவித்தார் சுத்தநாதன்.

இது அத்தனையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்

‘‘என்ன அப்படிப் பாக்குறீங்க..? பிரம்ம முகூர்த்தத்தில் நான் எழுந்திருச்சு கோயிலுக்கு வந்து கோயிலோட நடைதிறந்து சாமிக்கு பண்ற முதல் அபிஷேகமே நான் குடுத்துவிடுற பழம் அபிஷேகப்பொருள்ல தான் நடந்திட்டு இருக்குன்னா பாருங்களேன்.. இது எங்க வம்சத்தில காலங்காலமா நடந்திட்டு இருக்கு.. அந்த உரிமைய எங்களால விட்டுகொடுக்க முடியாது… கடவுளுக்கு செய்ற முதல் அபிஷேகத்த யாருக்கும் தரவும் முடியாது..’’ என்று ரொம்பவே பக்திமயத்தோடு பேசினார் சுத்தநாதன்.

‘‘ம்ம்.. ஒன்னோட நம்பிக்கைய மாத்த முடியாது நான் வரட்டுமா..?’’ என்று அந்தப் பெரியவர் கிளம்பும் போது கடையில் வேலை பார்க்கும் நாராயணன் வந்து சேர்ந்தான்.

அந்த அதிகாலை வானம் ரொம்பவே அழகாக இருந்தது. விடிவெள்ளி கூட இன்னும் கீழே விழவில்லை. இருட்டும் இல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் ஒரு ரம்மிய வெளிச்சத்தில் சொக்கிக்கிடந்தது அந்த அதிகாலை வானம்.

கால் சட்டை அவ்வளவு எடுப்பாக இல்லாமல் மேல்சட்டை கொஞ்சங்கூட பொருத்தமில்லாமலும் போட்டிருந்தான் நராராயணன். அப்போது கோயில் சாவிக்கொத்தை இடுப்பில் சொருகிய படியே நடந்து போய்க் கொண்டிருந்தார் பூசாரி.

‘‘ஏய்.. நாராயணா பூசாரி வந்திட்டாரு.. இப்ப கோயில் நடைய தெறந்திருவாரு.. சீக்கிரமா பழங்கள எடுத்து வையிடா.. பூஜைக்கு நேரமாகப்போகுது..’’ என்று கட்டளையைப் பிறப்பித்த சுத்தநாதன் வேக வேகமாகப் பழங்களை எடுத்துத் தட்டில் அடுக்கினார்.

‘‘நாராயணா.. சீக்கிரம் ஓடு.. பூசாரி பூஜையை ஆரம்பிக்கப் போறாரு..’’ என்று நாராயணனை விரட்டினார் சுத்தநாதன்.

‘‘இந்தா.. கிளம்பிட்டேன் முதலாளி..’’ என்ற நாராயணன் விறு..விறு வெனக்கிளம்பினான்.

அதற்குள் நடையைத் திறந்த பூசாரி பக்திப்பாடலை கசிய விட்டிருந்தார். அது காற்றில் கலந்து தெய்வீக சுகத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது.

ஓட்டமும் நடையும் போன நாராயணனுக்கு கையிலிருந்த பழங்களைப் பார்த்தும் நாக்கில் எச்சில் ஊறியது.

‘இவ்வளவு பழங்கள் இருக்கு சாமிக்கு என்ன இவ்வளவு பழமா..?

ரெண்டு பழத்த நாம சாப்பிடுவோமே..’ என்ற நாராயணன் தட்டிலிருந்த சில பழங்களை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். பழங்கள் ருசியாக இருக்கவே ஐந்தாறு பழங்களை எடுத்துச் சாப்பிட்டுவிட்டான். பின் ஓட்டமும் நடையுமாக கோயில் படிகளில் ஏறினான் நாராயணன்.

‘‘பூசாரி ஐயா.. பூஜைக்குப் பழம்..’’ என்று இரண்டு கைகளிலும் பழத்தட்டை அவர் முன்னால் நீட்டினான். தட்டில் பழங்கள் குறைவாக இருந்ததை பார்த்த பூசாரிக்கு ஏதோ நறுக்கெனத் தட்டுப்பட்டது.

‘‘ம்ம்..’’ என்று நாராணனைப் பார்த்தபடியே பூஜையை முடித்து விட்டு கோயிலை விட்டுக் கீழே இறங்கிய பூசாரி நேரே சுத்தநாதன் கடைக்கு வந்தார்.

‘‘பூசாரி ஐயா.. காலையில முதல் பூஜை நம்மோடது தானே..? பழங்கள் வந்து சேர்ந்ததா..?’’ என்று ரொம்பவே பக்தியோடு கேட்டார் சுத்தநாதன்.

‘‘ம்ம்.. வந்தது.. வந்தது..’’ என்று சுரத்தே இல்லாமல் பேசினார் பூசாரி.

‘‘என்ன.. சாமி ஏதாவது பிரச்சினையா..?’’ என்று சுத்தநாதன் கேட்டான்

‘‘ஆமா.. எப்பவும் பழம் கொண்டு வருவானே..! குருசாமி அவன ஏன்..? இன்னைக்கு அனுப்பல..’’ என்று பூசாரி கேட்டார்.

‘‘அவன் இன்னைக்கு.. வரலசாமி.. லீவு..’’ என்றார் சுத்தநாதன்

‘‘ம்ம்.. அதான் இன்னைக்கு பழம் ரொம்ப குறைந்து இருந்துச்சா..?’’ என்று பூசாரி கேட்டார்.

‘‘என்ன.. அபிஷேகப்பழம் கொறஞ்சு இருந்துச்சா..?’’ என்று கண்கள் இரண்டும் ரத்தமாய் சிவக்க

‘‘டேய் நாராயணா நாராயணா.. இங்க வாடா என்று அவர் கூப்பிடும் போதே கோபத்தின் உக்கிரம் தாண்டவமாடியது.

‘‘முதலாளி..’’ என்றபடியே வந்தவனை எதுவும் கேட்காமலேயே ஓங்கி அறைந்தார் சுத்தநாதன்.

‘‘சாமிக்கு பூஜை செய்யக் கொடுத்த பழத்த எடுத்து தின்னுட்டு தெரியாத மாதிரியே.. இருக்கியா..?’’

‘‘ஏண்டா.. பூஜைப் பழத்த எடுத்துத் தின்னே..’’ என்று நாராயணனை நையப்புடைத்தார் சுத்தநாதன்.

‘‘முதலாளி பசிச்சது.. அதான் எடுத்து சாப்பிட்டேன்.. என்னைய மன்னிச்சுருங்க.. முதலாளி இனிமே அப்பிடிச் செய்ய மாட்டேன்.. என்னைய மன்னிச்சிருங்க..’’ என்று அழுதவனை தன் ஆத்திரம் தீரும் மட்டும் அடித்து ஓய்ந்தார் சுத்தநாதன்.

தேம்பித்தேம்பி அழுதபடியே கடைக்குள் சென்றான் நாராயணன்.

அன்று முழுவதும் சுத்தநாதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதே நினைவாய் உழன்று கொண்டிருந்தார். இன்று இரவுப்படுக்கை கூட அவருக்கு அந்நியப்பட்டது. எப்படியோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தவரின் கனவில் கடவுள் தோன்றினார்.

‘‘சுத்தநாதா.. நீயும் ..உன் வம்சமுமே.. எனக்கு இவ்வளவு வருசமா.. காலையில பழ அபிஷேகம் பண்ணிட்டு இருக்கீங்க.. ஆனா.. இன்னைக்கு காலையில.. தான்பா கொஞ்சப்பழம் நான் சாப்பிட்டேன்..’’ என்று கடவுள் சொல்லி மறைந்தார்.

‘‘விசுக்’’ என எழுந்தார் சுத்தநாதன் . உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

மறுநாள் காலை வழக்கம் போலவே கடையைத் திறந்தார் சுத்தநாதன். எப்போதும் கோயிலுக்குப் பழங்களைக் கொண்டு போகும் குருசாமியும் அன்று கடைக்கு வந்து சேர்ந்திருந்தான். சுத்தநாதனோ அவனிடம் பழத்தைக் கொடுக்காமல் நாராயணனின் காலில் நெடுங்சாண்டையாக விழுந்து பழத்தட்டை அவன் கையில் கொடுத்தார். நாராயணன் நடப்பது எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான்.

‘‘முதலாளி..’’ என்று வாய்விட்டுப் பேசியவனை

‘‘பழத்தட்ட.. நீ.. கொண்டு போ..’’ என்று அனுமதி தந்தார் சுத்தநாதன். அந்த ரம்மியமான அதிகாலையில் கோயிலின் மணியோசை எட்டுத்திக்கும் கேட்டுக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *