செய்திகள் வாழ்வியல்

அபார அமெரிக்கா | ஆர்.முத்துக்குமார் (பாகம் – 10)

சுட்டிபையன் டென்னிஸ் என்ற இந்த இலகுவாக பறக்கும் போர் ரக அழகு விமான வடிவமைப்பாளரின் தொழில்நுட்பத் திறனை பாராட்டும் போது அவருக்கு இப்படி ‘Dennis the menace’ என்று குறும்புத்தனமாக பெயர் வைத்துக் கொள்ள கிடைத்திருக்கும் சுதந்திரமும் வியக்க வைக்கிறது!

ஓய்வு பெற்றுவிட்ட நாசாவின் அதிநவீன விண்வெளி ராக்கெட் ஸ்பேஸ் ஷட்டில் தற்போது காட்சிக்காக விமானங்கள் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டடுக்கு விண்கலத்தில் எல்லா பகுதிகளுக்கும் சென்று பார்த்து ரசிக்க அனுமதிக்கிறார்கள்.

விமான அருங்காட்சியகத்தில் முத்தாய்பாய் இருப்பது அங்குள்ள திரை அரங்கமாகும், இங்கு விமான வீரதீர படங்களை விசேஷமாக திரையிடுகிறார்கள்.

நாங்கள் பார்த்தது இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படமாகும். சுமார் ஒன்னரை மணி நேர திரைப்படம், சுமார் நான்கு மணி நேரமும் நடையாய் நடந்து பல விமானங்களில் ஏறி இறங்கிய பிறகு உடல் அசதிக்கு ஓய்வு தரும் சொகுசு சாய்வு சேர்கள் இருந்ததால் மிக வசதியாக இருந்தது.

நல்ல அருமையான திரைப்படம் தான், ஹாலிவுட்டின் பிரபலங்கள் இதில் பணியாற்றி மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

என்றாலும் அசதியை அன்று என்னால் வெல்ல முடியவில்லை. இந்திய நேரப்படி அதிகாலை மூன்று மணி சுமாருக்கு நல்ல அசதியுடன் இதமான கதகதப்புடன் கூடிய திரையரங்கில் என்னால் முழு படத்தையும் தூங்காமல் பார்க்க முடியாது போனது வருத்தமே!

எங்கள் மாப்பிள்ளை அபிஷேக்கோ நான்காவது முறையாக இந்த அருங்காட்சியகம் வருவதாக கூறினார், அலுத்து விடுமோ என்று நாங்கள் சற்றே பரிதாப்பட்டாலும் அவரது ஆர்வமும், வேட்கையும் அங்கு இருந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்ட போது புரிந்தது. அவரது ஆய்வு திறன் இப்படி உன்னிப்பாக அறிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதால் தான் என்று உறுதியாக கூறலாம், என்ன அப்படி தானே!

டேடன் விமானங்கள் அருங்காட்சி யகத்தில் விஞ்ஞானம், கணக்கு பாடங்கள் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பல தகவல்கள் காத்து இருப்பதால் அவற்றை திரட்டிச் செல்ல தினமும் பலர் வந்து செல்வது வாடிக்கையாம்!

மொத்ததில் இது உலகிலேயே மிக அரிய அருங்காட்சியகமாகும். கடந்த 100 ஆண்டுகளில் நாம் வானில் பறக்கும் ஆய்வுகளில் கண்ட வெற்றிகளை தேதிவாரியாக வரிசைப்படுத்தி வைத்து இருப்பது சிறப்பு அம்சமாகும்.

நாகசாகியில் அணுகுண்டை வீச சென்றவர்கள் உபயோகித்த விமானமும் காட்சியில் இருக்கிறது, B29 Backscan என்ற அந்த விமானம் பார்க்க கோர பயங்கரமாக இல்லாமல் ஏதோ சிறுவர்கள் விளையாடும் பொம்மை போல் சுட்டித் தனம் பெற்று இருக்கும் அதன் வெளிப்புற காட்சியை பார்க்கும் போது கோபப்படுவதா? சிரிப்பதா? என புரியாமல் உலக வளர்ச்சியில் நாம் கண்டு முக்கிய மைல்கள் என்பதால் ஒரு கணம் முழு கவணத்துடன் உற்றுப் பார்க்க வைக்கிறது.

மேலும் இங்குள்ள அனைத்து விமானங்களின் பின்னணியில் உள்ள கதைகள், சாராம்சங்கள், புதுமைகளை தெள்ளத் தெளிவாக விளக்கம் தர ஓய்வு பெற்ற போர் விமானியை தான் பணியில் அமர்த்தி இருப்பது மேலும் வியப்பாகவே இருக்கிறது.

சுமார் இரண்டு மணி நேரம் ஒரு கூரை பகுதியை சுற்றி காண்பிக்க ஒருவர் வருகிறார், அவரது எளிமையான ஆங்கிலமும், சுவாரசியம் கலந்த வர்ணனைகளும் வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்து விடுகிறது.

எதிரி விமானங்களை விழ்த்திய வீரதீர சாகசங்கள் செய்த விமானத்தையும், விமானியையும் பற்றி பேசும் போது அவரது தோனியில் நாட்டுபற்று கலந்து தற்பெருமையுடன் எதிரி மீது இருக்கும் ஏளனத்தையும் மறைக்காமல் வெட்ட வெளிச்சமாக பேசுவதும் அமெரிக்க தனத்தை தான் காட்டுகிறது.

(நாளை தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *