செய்திகள் வாழ்வியல்

அபார அமெரிக்கா | ஆர்.முத்துக்குமார் (பாகம்-7)

சின்சினாட்டி பல்கலைகழக வளாகத்தை நெருங்கும் போதே இது நகரீயத்தை எட்ட விடாது தனித்துவமாய் இருக்கும் பிரம்மாண்ட கல்வி கூடம் என்பதை உணர்வோம்.

முதலில் காரை நிறுத்த வேண்டிய பகுதிக்கும் போன போது அது ஏழு அடுக்கு மாடி, அங்கு ஒவ்வொரு தளத்திலும் குறைந்தது 300 கார்களை நிறுத்த முடியும் என்பதை பார்த்தோம்.

நாங்கள் சென்றதோ கிறிஸ்துமஸ் விடுமுறை நேரம் என்பதால் கார்கள் அதிகமில்லை, எளிதில் நிறுத்த இடம் கிடைத்தது, மேலும் அன்று நிறுத்த கட்டணமும் கிடையாது, என்ற அறிவிப்பு இருந்தது. கல்லூரி நாட்களில் சென்றால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே இலவசமாம்!

அந்த வளாகத்தில் பழமையும் புதுமையின் பொழிவும் நிரம்பவே இருந்தது. 1819 ல் துவங்கப்பட்ட இக்கல்வி கூடம் பண்டைய கட்டுமானங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது.

மேலும் 1990 க்குப் பிறகு பல கோடிகள் முதலீடு செய்யப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் பெற்றுள்ளது.

50,000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எல்லா பிரிவுகளிலும் சேர்க்கப்படுகிறார்கள். மிக கலைநயம் மிகுந்த வளாகம் என்பதாலும் இயற்க்கை சூழலுடன் அமைந்து இருப்பதாலும் மாணவ மாணவியர் மிக ஜாலியாக சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் படிப்பையும் கல்லூரி வாழ்க்கையையும் ரசிக்கிறார்கள் என மாப்பிள்ளை அபிஷேக் விவரித்தார். இதே வளாகத்தில் எம்.எஸ். படிப்பை முடித்ததுடன் மூன்று வருட ஆய்வு படிப்பையும் வெற்றிகரமாக முடித்தவர் என்பதால் அவரது அனுபவம் பேசுகிறார் என்பதால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இங்க பாடம் மட்டும் முக்கியமான அம்சம் என்பதாக தெரியவில்லை, பெரிய திரை அரங்கும், எல்லா துறைகளுக்கும் தனித்தனியே நவீன அரங்குகள் இருப்பதால் வாரா வாரம் கருத்தரங்குகளும், பயில் அரங்குகளும் நடந்த வண்ணம் இருக்குமாம்.

அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க பிரத்தியேகமாக மாணவர் சங்கமே இயங்குகிறதாம். அதில் பணிபுரியும் மாணவர்களுக்கு மாதச் சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

மிக நவீன பல்விளையாட்டு உள் அரங்கமும் கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து ஆட்டகளம் கொண்ட மகா பெரிய திறந்த வெளி ஸ்டேடியமும் கொண்டு இருக்கிறது.

பல அறிஞர்களின் பங்களிப்பு

மலைக்க வைக்கும் சின்சினாட்டி பல்கலைகழக வளாகத்தில் பல்வேறு துறைகளும், விளையாட்டு சமாச்சாரங்களும் இருப்பதால் பல அறிஞர்கள் உருவாகியுள்ளனர், அது மட்டுமா பல மேதைகளும் இங்கே பணியாற்றிய பெருமையும் உண்டு.

அமெரிக்காவில் இரண்டு பெரிய கோல்டன் கேட் பாலங்கள் உள்ளன, ஒன்று சின்சினாட்டியிலும், மற்றொன்று சான் பிரான்சிஸ்கோவிலும் உள்ளது. அதில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது தான் மிக நீளமானது, கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் பாலம் பசுபிக் கடலின் மேல் வாகனங்கள் சென்று மறு புறம் உள்ள மாரின் கவுன்டிக்கு இனைப்பை தருகிறது.

இதுவே உலகிலலேயே மிக நீண்ட தொங்கு பாலமாகும்! இதை கட்டியவர் ஜோசப் ஸ்டிராஸ் (Joseph Strauss) என்பவர் 1892 ல் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தான் கட்டுமான பொறியியல் படிப்பை படித்தவர், பிறகு 1933 சான் பிரான்சிஸ்கோவில் பாலத்தை நான்கு ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளார்.

பல லட்சம் டாலர் முதலீட்டில் உருவான இந்த பாலத்தை கட்டும் போது பல உயிர் சேதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி ஏதும் நடந்து விடக் கூடாது என்று உறுதியுடன் செயல்பட்ட ஜோசப் வேலை நடக்கும் போது வெளிப்பகுதியில் உறுதியான வலைகளை விரித்து இருந்தார்.

சுமார் 22 பேர் பெண்கள் உட்பட, ஏதேனும் காரணத்திற்காக தவறி விழுந்தனராம், ஆனால் ஜோசப் கட்டியிருந்த வலை அவர்களை உயிருடன் காப்பாற்றி விட்டது.

ஜந்தடி குள்ளமனிதர் ஜோசப் 1938 ல் இறந்து விட்டார், பூர்விகமாக ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்தது யெல்லாமே சின்சினாட்டியிலாம்.

அவர் காலத்தில் 500 பாலங்கள் கட்டியுள்ளார் அதில் சின்சினாட்டி பாலமும் ஒன்று.

அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும், ரஷியாவிலும் பல பாலங்களை வடிவமைத்து தந்த அவரது பாலங்கள் இந்தியாவிலும் அதே வரைவு மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதையும் பார்க்கலாம். கல்கத்தாவில் ஹவுரா பாலம் நல்ல உதாரணமாகும்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரும் பின்னர் அமெரிக்காவின் துனை ஜனாதிபதியாக செயல்பட்டவருமான சார்லஸ் தாவிஸ், போலியோ சொட்டு மருந்தை உருவாக்கிய ஆல்பர்ட் சபின், சந்திரனில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்டிராங் போன்ற பலர் கொண்ட நீண்ட ஆசிரியர்கள் பட்டியல் இந்த பல்கலைகழகத்தின் சிறப்பாகும்.

வளாகத்தை சுற்றி வரும் போது ஒரு இடத்தில் பொறிக்கப்பட்டு இருந்த தகவல்படி சுமார் 3 லட்சம் முன்னாள் மாணவர்கள் பதிவு செய்துள்ளனைராம். அதில் சமார் ஒன்னறை லட்சம் பேர் சினசினாட்டியில் தான் வாழ்கின்றனராம்!

இங்கு முன்னனி ஆய்வாளர் பட்டியலில் இந்தியர் உண்டா? ஆம் கணினியில் உள்ள பிரபல ‘பென்டியம்’ சிப்புகளை உருவாக்கிய வடிவமைப்பாளர் வினோத் தாம் (Vinod Dham) இங்கு படித்து பிறகு ஆசிரியப் பணியிலும் இருந்தவர் ஆவார்.

(தொடர்ச்சி அடுத்த வாரம்)

* * * 

பாதசாரி பராக் !

அமெரிக்காவைப் பற்றிய செய்திகளில் திடீரென மாணவன் துப்பாக்கியால் சக மாணவர்களை சுட்டுக் கொல்வது, நடுரோட்டில் யாரையாவது போட்டுத் தள்ளுவது என்பதை நேரில் அங்கு சென்றபோது நம்பவே முடியவில்லை, இந்த நட்பான மனிதர்கள் வாழும் பகுதியில் காட்டுமிராண்டி தனமான தாக்குதல்களா? என்றே யோசிக்க வைக்கிறது.

சாலையில் தப்பு செய்பவரை ‘போடா சாவு கிராக்கி’, வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா? மற்றும் பிரசுரிக்க முடியா கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு ரகளை செய்வது போன்ற எந்த காட்சியும் அங்கு உருவாகுவதேயில்லை!

தப்பு செய்தவர் மன்னிப்பு கேட்கும் முன்பே, It is ok, பரவாயில்லை என கூறிவிட்டு சிரித்தபடி செல்பவர்கள் தான் அமெரிக்க மண்ணில் வாழ்பவர்கள்!

தப்பு செய்தவர் மிக உணர்ச்சிவசப்பட்டு, Sorry, Sorry என்று கூறும் பாங்கே, ஏதோ தெரியாமல் தப்பு செய்து விட்டான், அதான் மன்னிப்பும் கேட்டு விட்டானே, என தோன்றி விடுவதால் வாய்ச்சண்டைக்கு வழியே கிடையாது.

சாலையை கடக்கும் பாதசாரியை பார்த்து விட்டால் 10 அடிக்கு முன்பே காரை நிறுத்தி விடுவார்கள். நாம் மெல்ல ஊர்ந்து வருவோம் அல்லவா அதை Roll on என்று கூறுகிறார்கள். அதை அமெரிக்க சாலைகளில் பார்க்கவே முடியாது.

‘நிறுத்து, பின் செல்ல’ Stop and proceed என்றால் காரை நடு இரவாக இருந்தாலும் முழுமையாக நிறுத்திவிட்டு, மனதில் மூன்று எண்ணி விட்டே, காரை நகர்த்துகிறார்கள்.

இதனால் தான் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் எந்த பயமுமின்றி பார்வையை மறைக்கும் குல்லா போட்டு, குளிரில் தப்பித்துவிட்டு வேக வேகமாக நடக்கிறார்கள்.

எந்த காரும் ஒலி எழுப்பி பாதசாரியை எச்சரித்து வேகப்படுத்துவதுமில்லை. முதியவர்கள், சிறுவர்கள் என யாரும் அச்சப்பட்டு வேகவேகமாக நடையும் ஓட்டமுமாக செல்வதை அமெரிக்க மண்ணில் பார்க்கவே முடியாதாம். எனது ஒரு மாத கால அமெரிக்க விடுமுறையில் ஒரு முறை கூட கார் ஹாரன் ஒலி கேட்கவேயில்லை, பாதசாரி பயந்து போய் தலைத்தெறிக்க ஓடவேயில்லை.

நம் நாட்டில் இருப்பது முந்தி சென்றுவிடு, ஆனால் அமெரிக்காவில் உள்ள சாலை விதியின் சித்தாந்தம் yield and drive அதாவது வழிவிட்டு ஓட்டவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *