சிறுகதை

அன்புள்ள அம்மா | தர்மபுரி சி.சுரேஷ்

மணி அம்மாவின் செல்லம் அதிகம் பேச மாட்டான் ; குறும்பு செய்ய மாட்டான்; அப்பாவிடம் நெருக்கம் குறைவு; ஏனோ அம்மாவின் மேல் ஒரு ஈர்ப்பு; அம்மா மாலாவிற்கு நான்கு பிள்ளைகள்; அவள் எல்லோர் மீதும் சரிசமமான அன்புதான் பகிர்ந்து கொண்டாள் இருந்தாலும் மணி அம்மாவின் மீது உயிராய் இருந்தான்.

அந்த சிற்றூரில் அப்பொழுதெல்லாம் சந்தை எனும் கூடுகை இருக்கும். சனிக்கிழமை வந்துவிட்டால் சுற்றுபுற கிராமங்கள் எல்லாம் அந்த ஊரிலே கூடும்.

காய்கறிகளில் இருந்து எல்லா பொருட்களும் அங்கே வந்து குவியும். அந்த ஊர் பெயர் பெல்ரம்பட்டி.

மணிக்கு சனிக்கிழமை வந்துவிட்டால் மனதிற்குள் ஒரே கொண்டாட்டம் காரணம் அன்றுதான் அம்மாவுடன் சந்தைக்கு செல்லமுடியும்.

அங்கே கண்ணைக் கவரும் சிகப்பு பஞ்சுமிட்டாய் கிடைக்கும்.

இனிக்க இனிக்கப் பொரி உருண்டை கிடைக்கும்.

அம்மாவிடம் அடம் பிடித்து கேட்டால் கோலி குண்டுகள் வாங்கிக் கொடுப்பாள்.

மரத்தில் செதுக்கின வண்ணம் பூசப்பட்ட அழகான பம்பரம் வாங்கிக் கொடுப்பாள்.

மனதிற்குள் அந்த பழைய அனுபவங்களை எல்லாம் மணி அசைபோட்டுக் கொண்டு இருந்தான்.

அம்மாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டே அலைந்து கொண்டு இருந்த அந்த நாட்களெல்லாம் எப்பொழுதோ முடிந்துபோயிற்று.

இன்று பிழைப்புக்காக பிறந்த மண்ணை விட்டு எங்கேயோ இருக்கிறோமே என மணி வருத்தப்பட்டு கொண்டு இருந்தான்.

மணி சென்னையில் தாம்பரத்தில் இயங்கும் ஒரு அரசு நூலகத்தில் நூலகராகப் பணியாற்றி வந்தான்.

அவனுக்குத் திருமணமாகி 6 வயதில் ஒரு குழந்தை இருந்தது.

இருந்தும் அவன் மனம் இன்னும் அம்மாவை நினைக்கும் பொழுதெல்லாம் குழந்தையாகவே மாறிடும்.

அம்மா எனும் காந்தசக்தி அந்த அன்பின் சக்தியால்தான் முழு குடும்பமும் அன்று இயங்கியது.

குடும்பத்தில் பொருளாதாரம் குறையும் போதெல்லாம் அம்மாவின் விடாமுயற்சி, தளராத மனப்பான்மை இன்னும் உள்ளத்தில் எனக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது

ஆம் என் அப்பா மளிகை கடையில் நட்டம் கண்டார் எங்கள் ஊர் அருகே ஓர் அணை கட்டப்பட்டது.

அப்பொழுது அங்கே குடியேறிய வெளி ஆட்கள் மளிகை கடையில் நிறைய பொருட்கள் வாங்கினார்கள் திரும்ப அந்த பணம் கடனை செலுத்தவில்லை.

அணை கட்டப்பட்ட பிறகு அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டார்கள்.

அதில் மளிகைக்கடையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அப்பா சோர்ந்து விட்டார்;

இனி என்ன பொழப்பு செய்வது. அம்மாவோ சோர்ந்து போகவில்லை.

அதே மளிகை கடையில் கொஞ்சம் பொருட்களை வைத்துக் கொண்டு அதில் வரக்கூடிய வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார்கள்.

பல வருடங்கள் ரேஷன் கடை அரிசியே குடும்பத்திற்கு சுவையான உணவானது.

எந்த நேரத்திலும் அம்மாவின் முகம் கோணவில்லை.

முகம் அழகாகவே இருந்தது; அருமையாகவே சிரித்தாள்; நான்கு பிள்ளைகளையும் உயிராக நேசித்தாள்.

மற்ற ஜனங்கள் மீதும் கரிசனை காட்டினாள்.

பணம் சேர்க்க வேண்டும் என்பது அவளுடைய வாஞ்சை அல்ல.

வாழ்வின் ஓட்டத்தில் நாமும் நம் பிள்ளைகளும் நம்மை சார்ந்தவர்களும் நன்றாக இருக்கவேண்டும்; சமாதானமாக இருக்க வேண்டும் என்பதே அவளின் நோக்கமாய் இருந்தது.

பிறரின் பணத்துக்கு ஆசைப்படாதவள் ; தனக்குரியதை கூட விட்டுவிடக் கூடிய குணம் உடையவள்.

தன் கூடப்பிறந்த அண்ணனை எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் விட்டுக் கொடுக்காத குணமுடையள்.

மணி ஆகிய என்னிடம் தன் அண்ணனை குறித்து அடிக்கடி பெருமையாக பேசுபவள்; தனக்கு உயிரான உடன்பிறப்பு என்பாள்.

இப்படி எத்தனை பேர் உலகத்தில் இருக்கிறார்கள் என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.

மணி ஆகிய நான் இன்று அவளுக்கு பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை என் சந்தோஷமே அவளின் சந்தோஷம்.

இன்றும் தனக்குரியதே போதும் எனும் மனதுடன் வாழ்ந்து வருகிறாள்.

இப்பொழுது கொரோனா விடுமுறை நாட்கள் எப்படியாவது அவளை பார்த்து விடவேண்டும் என மனம் ஏங்கியது

இருந்தாலும் பயணிக்க முடியாத நிலையில் கிடக்கிறேன். வீட்டில் முடங்கிக் கிடந்தாலும் மனம் அம்மாவின் நினைவில் அலைந்து கொண்டு இருந்தது

இறைவன் உலகத்திற்கு கொடுத்த உயிருள்ள தெய்வம்.

அந்த தெய்வத்திற்கு நாம் பெரிதாக ஒன்றும் செய்துவிட இயலாது;

அந்த தெய்வம் தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆசியை வழங்கிக் கொண்டிருக்கிறது என எனக்குள்ளே ஒரு குரல் ஒலித்தது.

அம்மாவை பார்க்க இயலவில்லை; இருந்தாலும் மனதிற்குள் அவளும் அந்த பழைய நாட்களின் நிகழ்வுகளும் ஓடிக்கொண்டே இருந்தது.

இன்று அம்மா வயதாகிவிட்டாலும் மனதளவில் இனிமையாகவும் எளிமையாகவுமே இருக்கிறாள்.

நான் அவளுக்கு ஒன்றும் செய்துவிடவில்லை பெரிதாக. இருந்தாலும் என்னை நினைக்கும் போதெல்லாம் அவள் சந்தோஷப்படுகிறாள்.

அடிக்கடி எனக்கு போன் செய்து நல்லா இருக்கியா; நல்லா சாப்பிடு; நல்லா தூங்கு; எதுக்கும் கவலைப்படாதே; நான் இருக்கேன் என ஆறுதல் படுத்துவாள்; தைரியம் ஊட்டுகிறாள்.

அவளுக்கு ஒரு நாளும் நான் ஆறுதல் சொல்லியதில்லை ; தைரியம் ஊட்டியது இல்லை;

இதற்குதான் இப்படி பழமொழி சொல்லி இருப்பார்களோ “பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு”

பர்சில் இருந்த அம்மாவின் போட்டோவை கையில் எடுத்து பார்த்தேன். இன்னும் அவள் என்னை நலம் விசாரித்துக் கொண்டே இருந்தாள்.

என்னருகே என் பிள்ளைகளும் என் மனைவியும் வந்தார்கள்.

அவர்களிடம் அம்மாவை குறித்து நிறைய பேசினேன்.

அவர்களின் மன தாள்களில் அன்புள்ள அம்மா நிரம்பிக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *