சிறுகதை

அன்பும் பாசமும் – ஆர்.வசந்தா

அன்பும் பாசமும் யாவருக்கும் பொதுவானதே. அந்த ஊர் இந்தியாவின் கடைசி எல்லை ஊர். ஒரு தெரு, இந்தியாவின் கடைக்கோடி. அடுத்த தெரு பாகிஸ்தானின் முதல் தெரு. இரு நாட்டிற்கும் பொதுவாக ஒரு பூங்கா இருக்கும். இரு நாட்டு மக்கள் ஜாதி, மதம் கடந்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் அந்தப் பூங்காவில் மகிழ்ச்சிகரமாக ஓடி ஆடி விளையாடினார்கள்.

இரு எதிர்வீட்டு நண்பர்களும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டனர்.

இந்தியன் ராம்குமாரும் பாகிஸ்தான் ரஹ்மானும் ஒன்றாக உட்கார்ந்து பேசி மகிழ்ந்தனர். ராம் தன் வீட்டில் தயாரித்த டீயை தன் நண்பன் ரஹ்மானுக்கு கொடுத்தான். ரஹ்மானும் தயங்காமல் வாங்கிக் குடித்தான். சிறிது நேரத்தில் ரஹ்மான் தன் மனைவி தயாரித்தது என்று கூறி இரண்டு கேக் துண்டுகளைக் கொடுத்தான். ராம் சட்டென்று சாப்பிடவில்லை. அந்தப் பக்கம் வந்த நாய்க்கு ஒரு துண்டைக் கொடுத்து அது சாப்பிட்டு முடித்த பின்னரே ராம் அந்த கேக்கை சாப்பிட்டான்.

இதைக் கவனித்த ரஹ்மான் நண்பரே நீங்கள் என்னை நம்பவில்லை என்றான். அதெல்லாம் இல்லை. வாயில்லா ஜீவனுக்கும் நாம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான்அப்படிச் செய்தேன் என்றான் ராம்.

ராமின் உள்மனம் சொன்னது இது தான். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ராமின் ஊரில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டது. ராணுவம் தலையிட்டு அக்கலவரத்தை அடக்க முயற்சித்தது. எங்கும் கூக்குரலும் அழுகை ஒலியும் மக்களின் பீதியுமாக அலைமோதியது.

ராம்குமாரை அவன் தாயார் ஒரு வீட்டிலிருந்த ஒரு பொந்து ரூமில் உட்கார வைத்து விட்டு துணிகளால் மூடிவிட்டு, ‘துணிவே துணை’ என்று சொல்லிவிட்டு அவனின் தங்கை இரண்டு வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்தாள். ஒரு இரும்புக்கரம் தங்கையை பிடுங்கிக்கொண்டு ஓடியது. தாயையும் அருகில் இருந்த ராமனை கூடத்தில் அனுப்பிவிட்டு ஓடி மறைந்தது. கலவரம் முடிந்து சகஜ நிலை வந்ததும் தாயும் தன் வீட்டிற்கு வந்தாள். ஆனாலும் தங்கையையும் எங்கு தேடியும் காணவில்லை. இதுவே ராமின் நண்பனின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கைக்கு காரணம்.

‘நண்பன் ரஹ்மானின் எண்ணம்’. அந்த மதக்கலவத்தின் போது ரஹ்மானின் தந்தை ஒரு ராணுவ வீரராகப் பணியாற்றினார். அவருக்கு பொதுமக்களின் மீது பரிவும் பாசமும் அதிகம். எப்படியும் மக்களைக் காக்கும் எண்ணம் கொண்டு ஒரு பெண்ணை அவர்களின் மடத்தில் ஒப்படைத்தான். அந்தச் சிறிய பெண் குழந்தையை பாதுகாக்க எண்ணி அவர்களின் மசூதியிலேயே ஒப்படைத்தார். ஏனெனில் அங்கு தான் பாதுகாப்பு அதிகம் என்று நினைத்தார்.

அந்தக் குழந்தை ‘உன் பெயரென்ன’ என்று கேட்டதற்கு ‘பத்மா’ என்றது. உடனே அருகிலிருந்தவர்கள், ஒபாத்திமா என்றார்கள். தீவிரவாதிகளும் நம் மதக்குழந்தை தான் என்று கூறிவிட்டு விட்டு சென்றார்கள். குழந்தையும் தப்பித்து விட்டது. சில நாட்களில் ஒரு குழந்தை இல்லாத தம்பதியினர் தாங்கள் வளர்ப்பதாக கூறி அவளை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர். அவர்களிடமே அந்த பெண் குழந்தை பாத்திமா ஒப்படைக்கப்பட்டாள். ரயில் புறப்படும் நேரம் பெருமாள் கோவில் மணி அடிக்கும் ஓசை கேட்டது. பத்மா மனம் தன் கோவில் மணியோசை போல் இருக்கிறதே என்று மனம் பதைத்தாள். ஆனால் ரயில் ஓட்டத்தில் அவளும் செய்வறியாது திகைத்துப் போனாள்.

பாத்திமாவும் நன்றாகப் படிக்கவும் வேலையும் கற்றுக் கொண்டாள். கத்திரிக்காயும் முருங்கைக்காயும் சாப்பிட்ட குழந்தை சிக்கனும், எலும்பும் சாப்பிடப் பழகியது. காலப்போக்கில் ஒரு முஸ்லீம் பெண்ணாகவே மாறினாள். அவள் வேறு யாருமில்லை, என் மனைவி தான் என்றான் ரஹ்மான். அவள் செய்தது தான் இந்த கேக் என்றான். மதம் ஒரு தடையல்ல.

மனித மனம் தான் முக்கியம் என்று புரிந்து கொண்டான் ராம்குமார்.

தன் தங்கையைப் பார்க்க ஆர்வம் கொண்டாலும் அதை மாற்றிக் கொண்டான் ராம். அவள் அவளாகவே அதாவது ‘பத்மா பாத்திமாகவே இருக்கட்டும்’ என்று நினைத்து விட்டான்.

ராம்குமார் ரஹ்மானிடம் ,

‘‘ மனிதாபிமானமும் அன்பும் உங்களுக்குள் நிறைந்துள்ளது. என் மனம் என்ன நினைத்தாலும் நீங்கள் மிகவும் உயர்ந்து விட்டீர்… நண்பரே…’’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெட்கித் தலைகுனிந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *