சிறுகதை

அன்புப் பரிசு | புது டெல்லி ஆர். ஹரிகோபி

Spread the love

சனிக்கிழமை பிற்பகல் மணி 1.30.

ஏடிஎம் கார்டு சரியாக வேலை செய்யாததால் தலைமைக் காவலர் சோமு செக் மூலம் பணம் எடுப்பதற்காக டோக்கன் பெற்றுக் கொண்டு சமூக இடைவெளியில் காத்திருந்தார்.

ரிடையர்ட் ஆவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகளே இருந்தாலும் இப்போதும் நல்ல திடகாத்திரமாகவே இருந்தார்.

ஊரடங்கின் காரணமாக வேலைப் பளு அதிகரித்திருந்தது. இரண்டு மணிக்கு டூட்டி மாறும்போது அவருக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பதால் சீருடையில் வந்திருந்தார். ஊரடங்கின் காரணமாக அவரை நியமித்திருந்த செக்கிங் ஸ்பாட்டும் வங்கியும் அருகருகே இருந்தது வசதியாக இருந்தது.

மணி 1.45 ஆனபோது அவரது எண் டிஜிடல் டிஸ்ப்ளே போர்டில் கண்சிமிட்டியது. கூடவே கூடவே ஒரு பெண் தன் அழகான குரலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எண்ணை உச்சரித்தாள்.

“அப்பாடா….” பணம் சீக்கிரம் கிடைத்து விட்டால் இரண்டு மணிக்கு முன்பாகவே ரிப்போர்ட்டிங் செய்யலாம் என்று நிம்மதி பெருமூச்சொன்றை விட்டார் சோமு.

காசாளர் செக்கின் பின்புறம் ஒரு கையெழுத்து போடச் சொன்னார். செக்கை முன் பின்னாக திருப்பிப் பார்த்தவர் திருப்தியடையாமல் மீண்டும் ஒரு கையெழுத்தைப் போடச் சொன்னார். பிறகு மூன்று கையெழுத்தையும் கலந்தாய்ந்தவர் முகம் சுழித்தவாறு கேட்டார்,

“சார் வேற செக் லீஃப் கொண்டு வந்திருக்கீங்களா ?”

“இல்லையே சார், ஏன்……?”

“உங்க மூன்று கையெழுத்துகளும் மூன்று விதமாக இருக்கிறது. ஒன்றுக்கொன்று டேலி ஆகவில்லை. வங்கி ரூல்ஸ் படி உங்களுக்கு பணம் கொடுக்க முடியாது”

“சார் இன்னொருமுறை ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற வீட்டுக்குப் போய் செக்புக் எடுத்துவர சமயம் இல்லை. அதற்குள் பேங்க் வேலை நேரமும் முடிந்து விடும். எனக்கும் இரண்டு மணிக்கு டூட்டிக்கு ரிப்போர்ட் செய்யணும்” என்று சோமு பரிதவிப்புடன் கூறினார்.

ஊரடங்கு காரணமாக கூடுதல் வேலை செய்யும் மன அழுத்தத்தால் அவரது கைகள் சில நாட்களாகவே லோசான நடுக்கம் கண்டிருந்தது. அதனால்தான் அவரால் சரியாக கையெழுத்து போட முடியவில்லை.

சோமு மீண்டும் கெஞ்சும் தோரணையில் “சார், நாளை ஞாயிற்றுக் கிழமை. நிலமையை புரிஞ்சுக்குங்க…….. எப்படியாவது பணம் தந்தால் எனக்கு இந்த நேரத்தில் உதவியாக இருக்கும்………..” என்று படபடப்புடன் கேட்டார்

“இதில் எனக்கு எந்த தீர்மானமும் எடுக்க பவர் இல்லே. நீங்க போய் பிராஞ்ச் மேனேஜரைப் பாருங்க…..அவர் சம்மதித்து சேங்சன் செய்தால் நான் பணம் தருகிறேன்……..” என்று கேசியர் கையை விரித்து விட்டார்.

கிளை மேலாளர் விகாஸ் படு இளைஞனாக இருந்தான். டைரக்ட் புரொபேஷனரி ஆபீசராக வேலைக்கு சேர்ந்து ஒரு சில வருடங்களில் கிளை துணை மேலாளராகவும் பிறகு விரைவிலேயே கிளை மேலாளராகவும் பதவி உயர்வுகள் பெற்றவன். மாவு கட்டுடன் இடது கையை கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்டு, வலது கையால் எதையோ எழுதிக் கொண்டிருந்தான்.

இந்தக் கால இளைஞர்கள் தன்னைப் போன்ற வயதானவர்களை எங்கே மதிக்கப் போகிறார்கள், இனி எனக்கு இன்று பணம் கிடைத்த மாதிரிதான் என்ற அவநம்பிக்கையுடன் கிளை மேலாளர் அறைக்குள் நுழைந்தார் சோமு.

தயங்கியபடி நிலமையை விளக்கிய சோமு செக்கை விகாஸிடம் கொடுத்தான். அதைக் கொடுக்கும்போது அவரது கை லேசான நடுக்கத்தில் இருப்பதை அவன் கவனிக்க தவறவில்லை.

விகாஸ் வசீகரமான புன்முறுவல் ஒன்றை உதிர்த்தான்.

“சார், ஆஸ் பர் பேங்க் ரூல்ஸ், இட் ஈஸ் நாட் அட் ஆல் பாஸிபிள் டு பாஸ் திஸ் கைண்ட் ஆஃப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ……….” என்று நிறுத்தியவன் தொடர்ந்து, “எனி ஹௌ ஐ வில் ஹெல்ப் யூ கீப்பிங் இன் மைண்ட் யுவர் ஏஜ் அண்ட் ஷார்ட்டேஜ் ஆஃப் டைம்……….” என்று கூறியவன் கம்ப்யூட்டர் திரையில் இருந்த சோமுவின் கையெழுத்து நகலுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிறிது வித்தியாசம் தெரிந்தாலும் அது அவருடைய கையெழுத்துதான் என்பதை உணர்ந்து கொண்டான்.

சிகப்பு கலரில் ஒப்புதல் தந்தவன், செக்கை சோமுவை நோக்கி நீட்டினான், “டைம் முடியப் போகுது …….சீக்கிரம் போங்க” என்றவன் இன்டர்காமில் கேஷியரிடம் “நௌ யூ கேன் டிஸ்பர்ஸ் த கேஷ்…..”

மணி 1.55

கேஷியர் தந்த பணத்தை எண்ணி வாங்கிக் கொண்ட சோமு, வங்கியிலிருந்து வெளியேறுவதற்கு முன் விகாஸின் அறைக்கு மீண்டும் சென்றார்.

“சார், ரொம்ப நன்றி………உங்க உதவியை எப்பவும் மறக்க மாட்டேன். ……..” என்று உச்சிகுளிர்ந்து கூறியவர், “சார்…….ஏதாவது ஆக்ஸிடென்டா……கைக்கு கட்டு போட்டிருக்கீங்களே………?” என கேட்டார்.

விகாஸ் மென்மையாய் சிரித்தபடி கூறினான்,”லாக் டவுன் தொடங்கின முதல் வாரத்தில் வேலைக்கு வந்து கொண்டிருந்த எனக்கு, நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் நம்பாமல் லட்டியால் நீங்கள் தந்த அன்புப் பரிசுதான் இது. அதை நீங்க வேணா மறந்திருக்கலாம். ஆனால் அடிவாங்கிய எனக்கு மறக்குமா…..?”

‘‘ சார்…. என்னை மன்னிச்சிடுங்க. சார் ’’ என்று வெட்கித் தலைகுனிந்து சொன்னபடியே வெளியேறினார் சோமு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *