சிறுகதை

அன்புடன் ஆம்புலன்ஸ்- ராஜா செல்லமுத்து

அரசாங்கம் தார்ச்சாலை போடாத ஒரு கிராமத்தில் ஒரு பெண் பிரசவத்திற்காகத் துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.

கைப்பக்குவத்தில் பிரசவம் பார்த்து விடலாம் என்று ஒரு வயதான பெண்மணி சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்த அந்த கற்பினியின் குடும்பத்தார்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்தார்கள்.

ஏன்டி எந்த ஆம்புலன்ஸ்காரன் இங்க வருவான்? இப்படி பிள்ளை பெறுவற்கு துடிச்சிட்டு இருக்குற பொம்பளைய எவன் கூட்டிட்டு போவான் ? ஆம்புலன்சுக்கு போன் பண்றேன்னு சொல்றியே இது நடக்குமா ? என்று சுற்றி இருப்பவர்களில் ஒரு பெண் ஆச்சரியமாகக் கேட்டாள்

ஏன் வராது . இப்ப வரும் பாரு என்று அவள் கிழவிக்கு சொல்லி முடிப்பதற்குள் பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணின் வீட்டுக்கு அருகே வந்து நின்றது ஆம்புலன்ஸ்.

ஆம்புலன்ஸ் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம் .இது எப்படி சாத்தியம்? இந்த அரசாங்கம், நம் கிராமத்தைக் கண்டு கொள்ளவில்லை .ஓட்டு வாங்குவதற்கு மட்டும் தான் இங்க வர்றாங்க மத்தபடி எந்த வசதியும் செய்து கொடுக்காத இந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்திருக்கிறதே என ஆச்சரியமாக கேட்ட ஒரு கிழவிக்கு அதே நபர் பதில் சொன்னார்.

என்ன இது அரசாங்கம் அனுப்புன ஆம்புலன்ஸ்னு நினைச்சியா. இல்ல. இது தனியார் வச்சு நடத்துறாங்க. நல்ல மனசு மனுஷங்களுக்கு எந்த கஷ்டமா இருந்தாலும் அதை உடனே நிறுத்தி நிறைவேற்றி வைக்க ஆம்புலன்ஸ இருந்து ஆரம்பிச்சு வச்சிருக்கார் ஒரு பெரியவர்

ஆம்புலன்ஸில் வந்த நபர்கள் பிரசவ வலியில் துடிக்கும் அந்த பெண்ணை அலாக்காகத் தூக்கிப் போனார்கள்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் கிராமமே சந்தோஷத்தை தெரிவித்தார்கள். அத்தனைக்கும் அந்த ஆம்புலன்ஸ் தான் காரணம் என்று கடவுளைக் கும்பிட்டது போல ஆம்புலன்ஸ் ரொம்ப நன்றி சொன்னார்கள்.

சரியான நேரத்துல வந்து எங்க புள்ளையை காப்பாத்திட்டீங்க. எத்தனை நன்றி சொன்னாலும் அது பத்தாது

என்று பிரசவம் ஆன பெண்ணின் தாய் அந்த ஆம்புலன்ஸை கையெடுத்து கும்பிட்டாள்.

இது நன்றிக்காக இந்த வேலையை நாங்க செய்யல. மனுசங்க நல்லா இருக்கணும். சுத்துப்பட்டு இந்த கிராமத்தில இருக்கிற யாரா இருந்தாலும் ஆம்புலன்ஸ்னு போன் அடிச்சா அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள இந்த இடத்தில நாங்க தயாராக இருப்போம். இதுக்கு ஓனர் மணியோட கட்டளை என்று சொன்னார் டிரைவர்.

தம்பி யாருயா அந்த மணி? என்று அந்த பெண் கேட்டபோது

அவர்தான் எங்க ஓனர். ஒரு காலத்துல அவருடைய அம்மா சாகப் பிழைக்க கெடக்கும் போது யாரும் வந்து என்ன ஏதுன்னு கேட்கல. அது ஒரு கிராமம். யாரும் உதவி செஞ்சு ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்க்காததினால அவர் அம்மா இறந்துட்டாங்க . அத மனசுல வச்சுட்டு தான்.

யார்கிட்டயும் பணம் வாங்காம போன் பண்ணுனா ஒடனே அவங்களுக்கு உதவி செய்யணும். இது நன்றிக்காக செய்ற வேலை இல்லை .நாலு பேரு நல்லா இருக்கணும்னு செய்ற வேலை. அப்படின்னு எங்க ஓனர் சொல்லுவார். அதைத்தான் நாங்க இப்ப செஞ்சுகிட்டு இருக்கோம் என்றான். அந்தக்

குழந்தையும் தாயும் அப்படியே இருக்கட்டும் .அவங்க சரியானதும் எங்களுக்கு போன் பண்ணுங்க. நாங்களே கூட்டிட்டு போறோம் என்று சொல்வதற்குள்

இன்னொரு இடத்தில் இருந்து போன் வந்தது,

‘‘ஆம்புலன்ஸ் தானே ?…’’

ஆமாங்கய்யா .சீக்கிரம் வாங்க. எங்க அப்பாவுக்கு உடம்புக்கு சரியில்லை

என்று எதிர்திசையில் குரல் வர…

‘‘கூகுள் மேப் அனுப்புங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல அந்த இடத்தில இருப்பாேம்’’

என்று சொல்லிக் கிளப்பினார் அந்த டிரைவர் .

இப்படியும் மனிதர்களா ?என்று ஆச்சரியத்தில் உறைந்து போய் பார்த்தார்கள் அந்த ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள்.

அந்த ஆம்புலன்ஸ் அன்பை சுமந்து கொண்டு பறந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *