சிறுகதை

அன்பிற்கு அடைக்கும் தாழ் உண்டோ – மு.வெ.சம்பத்

Makkal Kural Official

சாம்சன் மலைப் பகுதியில் உள்ள கிராமத்தில் மக்களோடு மக்களாய் வாழ்ந்து வந்தார். அது மொத்தம் 50 வீடுகள் அடங்கிய கிராமம். இயற்கையோடு இணைந்த வாழ்வு. சற்று சமமாக உள்ள மலைப் பகுதியில் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தார்கள் கிராம மக்கள்.

வெயில் காலங்களில் வாழ்வு நன்றாகவே இருக்கும். மழை மற்றும் பனிக் காலத்தில் வாழ்வு என்பது மிகவும் கடினம் தான்.

அடை மழை பெய்தால் மணல் கற்கள் மேலிருந்து உருண்டு வந்து பாதிப்பை உண்டாக்கும். இதற்கு சாம்சன் தனது சகாக்களுடன் நிறைய யோசனை செய்து சில வழிகளை பின்பற்றி தற்போது சேதம் குறைந்துள்ளதாக உணர்ந்தார்கள். இவர்கள் வாழும் மலைப்பகுதிக்கு பக்கத்தில் உள்ள மலைப் பகுதி மிகவும் ஆபத்தானது. அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். செங்குத்தான பாறைகள்.அடர்த்தியான மரங்கள் நிறைந்த பகுதி. யாரும் அங்கு செல்ல பயப்படுவார்கள். மலையின் கீழ்ப் பகுதியில் சில சமயம் சாம்சன் மற்றும் சகாக்கள் வேட்டைக்குச் செல்வார்கள். ஏதாவது கொடிய விலங்குகள் சப்தம் கேட்டால் எச்சரிக்கையுடன் வந்த வழியே வந்து விடுவார்கள்.

சாம்சன் உட்பட எல்லோரும் பயப்படுவது மழை, காற்று இவற்றிற்குத் தான். சாம்சன் சில பெரிய அதிகாரிகளை பிடித்து தனது கிராமத்திற்கு தகவல் தொடர்பு சாதனம் கிடைக்கும்படி செய்தார். நாட்டு நடப்புகள் பற்றிய அறிய ஏதுவாக இது அமைந்தது. சூரிய ஒளி மின்சாரம் மூலம் கிராமம் முழுவதும் மின் இணைப்புக் கிடைக்கச் செய்தார் சாம்சன். சாம்சன் இல்லையெனில் கிராமத்தில் ஒன்றுமில்லை என்றாகி விட்டது.

மழைக் காலம் தொடங்கியது. ஆங்காங்கே பாதுகாப்பு நடவடிக்கைகள் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டன. புதிய புயல் உருவானது பற்றி வானிலை அறிக்கை சொன்னவுடன், சாம்சன் அரசு அதிகாரிகளுடன் அதன் நிலைமை பற்றி விசாரித்தார். அவர்கள் இரண்டு நாளில் கழித்துத் தான் வருகிறது என்றார்கள். ஆவண செய்யுங்கள் என்றார் சாம்சன். ஆனால் இரவு வேளையில் திடீரென பெய்த வான வெடிப்பு மழை அதிக மழைப் பொழிவை தந்ததோடு மட்டுமல்லாமல், மலை மேலிருந்த மணல் கற்கள் இவற்றுடன் ஆக்ரோஷமாக இறங்கி அந்த கிராமத்தையே சூறையாடியது. ஒட்டு மொத்த கிராமமும் காலி. வீடுகள் அதில் உறங்கிய ஆட்களோடு பூமிக்குள் புதைந்தது. அந்த ஆக்ரோஷ மழையில் சற்று வெளியே வந்த சாம்சனை காற்றாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. அது சாம்சனை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் கொண்டு தள்ளியது. ஒரு சிறு மரக்கிளையில் சிக்கிய மயங்கிய நிலையில் இருந்த சாம்சனை அங்கு எதேச்சையாக வந்த மக்கள் காப்பாற்றினார்கள்.

சாம்சன் தான் ஆசையோடு வளர்ந்த கிராமம் தனது குடும்பம் உட்பட தரை மட்டமானது கேட்டு நான் மட்டும் ஏன் பிழைத்தேன் என்று அழுதார். அவரை மீட்டவர்கள் அவரை தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு நிர்கதியாக உள்ளவர்களைக் கண்டு மனம் புழுங்கி மறுபடியும் அழுதார். நாம் நம் துயரை பெரிதாக நினைத்தோமே. இவர்கள் சொல்லும் துயரச் செய்திகள் நெஞ்சைப் பிளக்கின்றதே. எதற்கு மனித வாழ்க்கை. யாருக்காவது உதவி செய்யும் நிலைமையில் நான் இல்லையே. துயரம் கண்டவர்களைக் கண்டால் நம் மனமும் துயரடைகிறதே. போதும் இந்த வாழ்க்கை. எல்லோரையும் இழந்து வாழும் வாழ்வு எதற்கு. ஏன் இன்னும் உண்டு வாழ்வை கடத்த ஆசை என்றவாறு யோசித்து, மறுநாள் காலையில் யாரிடமும் சொல்லாமல் தூரத்தில் தெரிந்த மலைக்குச் சென்றார் சாம்சன்.

அந்த மலையில் தனது கால் போன போக்கில் சென்றார். உணவு,தண்ணீர் போன்ற எற்தவொரு சிந்தனையுமின்றி நடந்தார். மாலைப் பொழுது நெருங்கும் நேரத்தில் ஒரு சிறு குகை போன்ற அமைப்பில் இருந்த ஒரு பகுதியில் இரவுப் பொழுதைக் கழிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்து இடத்தை பார்க்கையில் ஓரளவிற்கு பாதுகாப்பான இடம் என்று நினைத்த வேளையில், அங்கு ஒரு முனகல் சப்தம் கேட்டு பார்க்கையில் ஒரு புலிக் குட்டிகாணப்பட்டது, நேற்று பெய்த மழையில் மலையிலிருந்து அடித்து வரப் பெற்றிருக்கலாம் என்று நினைத்தார்.

உடலெல்லாம் சேறாகி குளுரில் நடுநடுங்கிய குட்டியை அங்கு இருந்த ஒரு துணிக் கற்றையில் உள்ளே இருந்த நனையாத துணியால் துடைத்து மரக் கட்டைகளால் ஒரு சின்ன நெருப்பு உண்டாக்கி அதன் குளிரை போக்கி சம நிலைக்கு கொண்டு வந்தார். என்ன ஆகாரம் கொடுப்பது, என்ன இந்த வேளையில் கிடைக்கும் என்று எண்ணிய வேளையில் மலையில் ஒரு குட்டை இருப்பதைக் கண்டு அதில் மீன் பிடித்து அதற்கு தந்தார். இரவு இருவரும் தூங்கினார்கள். சாம்சன் காலையில் எழுந்ததும் எப்போதும் பாடும் தனக்குப் பிடித்த பாட்டை பாடினார். என்ன கொடுமை. நாமே வாழ்க்கை வேண்டாமென வந்தோம். எங்கேயோ தாயை விட்டு பிரிந்த இந்த குட்டி ஒட்டி கொண்டு விட்டதே என்று நினைத்தார்.

அடுத்த நாள் முதல் சபீர்( புலிக் குட்டிக்கு அவர் வைத்த பெயர்) வளர்ச்சிக்காக காட்டில் சுள்ளிகள் பொறுக்கி விற்றார். சபீர் சாம்சனுடன் ஒன்றி வாழ்ந்தது. சபீர் சற்று வளர்ந்ததும் அதுவாக போகும் என்று நினைத்த சாம்சன் அது போகாதது கண்டு கவலையுற்றார். மறுபடியும் வாழ்வில் சுக துக்கங்களா என்று யோசித்தார். அன்று வழக்கமாக எழுந்திருப்பதை விட சற்று தாமதமாக எழுந்த சாம்சன் சபீரைக் காணாமல் சற்று தவித்தார்.

வளர்ந்த புலி எப்படி நம்முடன் இருக்குமென நினைத்து, காலைப் பொழுதில் கூடாரத்தைக் காலி செய்துவிட்டு மலையிலிருந்து கீழே வந்தார். மாலைப் பொழுது தனது பயணத்தை முடித்துக் கொண்டு இரவுக்கு வழி விட்டது. அங்கிருந்த ஒரு மேடையில் அமர்ந்தார். சற்று தளர்ச்சியாக உணர்ந்தார். அப்போது அங்கு வந்த அந்த பகுதி மக்கள் அய்யா இந்த இடம் புலிகள் நடமாடும் இடம், தங்காதீர்கள் என்றார்.

இனிமேல் நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன். எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். நான் இறந்தால் புதைத்து விடுங்கள் என்றார். சரியான மனிதன் என்று கூறியவர்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.

சற்று நேரத்தில் ஒரு புலி தனது குட்டியுடன் வந்தது. சாம்சன் இதை கவனியாது தனது பாட்டில் மூழ்கி இருந்தார். இதை பக்கத்தில் சற்று தள்ளி இருந்த வீட்டில் உள்ளவர்கள் ஜன்னலில் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது வந்த புலிக்குட்டி சடாரென இவர் மீது பாய்ந்து தனது நாக்கால் அவர் முகம் கைகளில் முத்தமிட்டது. அவர் மடியில் படுத்தது. இவர் சபீர் என கூப்பிடடதும் ஆனந்தமாய் துள்ளியது. பக்கத்தில் நின்றிருந்த புலியைக் காட்டி இது தான் அம்மாவா என்று கேட்டார். சபீர் அம்மாவைப் பார்த்தது. இப்போது தாய்ப்புலி ஒரு சிறு ஒலியெழுப்ப, சபீர் தாயுடன் விடை பெற்றது. புலிகள் சென்றதும் சிலர் வந்து சாம்சனிடம் உங்களுக்கு பயம் இல்லையா என்று கேட்க, சாம்சன் தனது இதுவரை நடந்த கதையைக் கூறினார்.

அப்போது ஒருவர் தாங்கள் இன்று இரவில் வெளியே படுக்காமல் எதிரில் உள்ள சிறு வீட்டில் தங்குங்கள் என்று கட்டாயப் படுத்தி தங்க வைத்தார்கள்.

நடு இரவில் சாம்சனுக்கு சற்று உடல் உபாதை ஏற்பாட்டு மூச்சு விடத் திணறுகையில், தனது அருகில் யாரோ வருவது போல் உணர, அவர் பார்க்கையில் சபீர்புலி அவரை சுற்றிச் சுற்றி வந்தது. சாம்சன் படுத்திருந்த நிலையில் சற்று ஈனமான குரலில் சபீர் எனக் கூற, அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தது. ஏண்டா கடைசியில் வந்து அன்பின் அடையாளமாக நிற்கிறாய் என்றார்.

அடுத்த சற்று நேரத்தில் அவரது ஆன்மா காற்றில் கரைய, சபீர் என்ன நடந்தது என்று அறியாமல் படுத்திருந்தது. காலையில் ஒருவர் வந்து பார்த்து அந்த வீட்டில் சாம்சன் அசையாமல் படுத்திருக்கிறார். புலிக்குட்டி கண்ணீருடன் உள்ளது என்றார்.

பிறகு அங்கு சென்ற மக்களைக் கண்ட புலிக்குட்டி சற்று மேடான பகுதிக்குச் சென்று அங்கே இருந்து பார்த்துக் கொண்டே இருந்தது. கிராமத்து தலைவர் வந்ததும் சாம்சனின் இறுதிக் காரியங்கள் முடிந்தது. கலைந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்திலிருந்த ‘‘ ஒருவர் துயரத்தில் உலவும் புலிக்குட்டியின் அன்பைப் பாருங்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’ என்ற வள்ளுவர் வரிகள் உயிர் பெற்றது போலிருக்கே என்றார்.

பின் சற்று தூரத்தில் தாய் வருவதைக் கண்ட குட்டிப்புலி விரைந்து சென்று தாயுடன் சேர்ந்து அங்கிருந்து நடந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *