அதுவரை வெறுமையாக இருந்த அலுவலக ஊழியர்களின் மனம் இன்று விரிந்து பரந்து விசாலமானது. அதுவரை இறுக்கமாக இருந்த ஊழியர்களின் இதயம் மென்மையாக மாறியது.அதுவரை மனிதர்கள் என்றால் என்ன? உறவுகள் என்றால் என்ன? நட்பு என்றால் என்ன என்பது அன்று முதல் எல்லோருக்கும் தெரிய வந்தது.
மனிதர்களை விட்டு எட்டியே இருந்தவர்களுக்கு அன்று முதல் அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை பேரின் அன்பும் கிட்டியது. இந்தச் சுகத்தை நாம் இழந்து விட்டோமே ? இந்த உறவுகளை நாம் மறுதலித்தோமே? கூடியிருப்பது தான் கோடி நன்மை என்பது இப்போதுதான் தெரிகிறது. இனி இருக்கும் காலத்தை சந்தோசமாகவும் எல்லோருடனும் கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அலுவலக ஊழியர்கள் .அலுவலக உணவு இடைவேளையில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள். மனம் விட்டுப் பேசுவதற்கு அந்த நேரம் அவர்களுக்கு அவசியம் தேவைப்பட்டது .
” இந்த வாரம் யார் உங்க வீட்டுக்கு போகப் போறோம்? “
என்று அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கேட்க
” நேரு வீட்டிற்கு “
என்று அலுவலக ஊழியர்கள் சொன்னார்கள்.
” யார் யார் வர்றீங்க ?அப்படின்னு இப்பவே சொல்லிருங்க . உங்களுக்கு உணவு தயார் பண்ணனும். வேற என்னென்ன வேணும்னு சொல்லுங்க. தண்ணி கிண்ணி வேணுமா?
என்று நேரு கேட்க
” அதெல்லாம் வேண்டாம். நாங்க எதுவும் சாப்பிட மாட்டோம். நம்ம அலுவலக ஊழியர்கள் ரொம்ப நல்லவங்க. எல்லாம் மொத்தமா வருவோம். உங்க வீட்ல என்ன இருக்கோ அதைச் சாப்பிட்டு வந்துடுறோம் சரியா ? “
என்று நேருவிடம் சொல்ல
“சரி அவசியம் வாங்க “
அந்த வார விடுமுறை நாளில் அலுவலக ஊழியர்கள் எல்லாம் நேருவின் வீட்டில் கூடினார்கள். அத்தனையும் தடபுடலான உணவுகள் .அதைவிட அலுவலகத்தில் வேலை செய்யும் அத்தனை பேரும் நேருவின் வீட்டில் ஆஜர் .இந்த இன்பம் யாருக்கு கிடைக்கும்? அலுவலகத்தில் பணிபுரியும் ஆட்களின் இருப்பிடங்கள் எல்லாம் ஒவ்வொரு இடத்தில் இருக்கின்றன.
ஆனால் பணிபுரியும் இடத்தில் தான் நாம் ஒன்றாக இருக்கிறோம். பணிபுரியும் நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதில்லை. பேசவும் அங்கு நேரம் கிடைப்பதில்லை .ஆனால் அலுவலக நேரம் முடித்து ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசும்போது ஒவ்வொரு குடும்பத்தின் நிலைமை. ஒவ்வொரு ஊழியர்களின் நலன். அவர்களின் தேவை.
யாருக்காவது உதவி தேவை என்றால் பங்கிட்டுக் கொள்ளும் பாங்கு. இவைகள் எல்லாம் அலுவலக நேரம் முடிந்து தான் நமக்கு பேச நேரம் கிடைக்கிறது. இதை நாம தவற விட்டு விட்டோம். பணிக்கு வருகிறோம். பணியை முடித்துவிட்டு சாப்பாட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு ஆளுக்கு ஒரு திசையாகப் பறந்துடுறோம். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்ளவில்லையே? ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லையே? ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரிக்கவில்லையே? அலுவலக நேரம் முடியுதோ? இல்லையோ? வீட்டப் பாத்து ஓடிப் போயிர்றோம். ஆசுவாசமா பேசும் போது தான் நம்மைப் பத்தி நமக்கே தெரியுது. எவ்வளவு இன்பத்தை நாம இழந்து இருக்கிறோம். எவ்வளவு நட்பை நாம் தொலைத்திருக்கிறோம் “
என்று அந்த அலுவலக ஊழியர்கள் எல்லாம் நேருவின் வீட்டில் இருந்து வருத்தப்பட்டார்கள்.
” ஆமா இனிமே அலுவலகம் முடிஞ்சு நாம ஓடிரக் கூடாது. கட்டாயம் வேலை நேரம் முடிஞ்ச பிறகு ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி, ஒவ்வொருவரின் தேவைகளையும் நாம் அறிந்து கொள்வது நல்லது. ஒரே இடத்தில் பணிபுரியுறோம் .எதற்கு இந்த இறுமாப்பு .எதற்கு இந்த மேட்டிமைத்தனம் எதற்கு இந்த வெட்டி கௌரவம். இதுவெல்லாம் வேண்டாமே? நாமெல்லாம் ஒரே இடத்தில பணிபுரியுறோம். ஒருத்தரோட முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிறோம்.
ஆனா, ஒருத்தரோட ஒருத்தர் இணைந்து போகத் தான் மறுக்கிறோம். இனிமே அது வேண்டாமே? இப்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வீட்டுக்கு பயணப்படுவோம். அவங்க வீட்டில சமைக்கிறத சாப்பிடுவோம். அவங்க குடும்பத்தோட அந்த விடுமுறை நாளைக் கொண்டாடுவோம். அடுத்த வாரம் இன்னொரு ஊழியர் வீடு. அடுத்த வாரம் இன்னொரு ஊழியர் வீடு. இப்படி உறவுகளை வளர்த்துக்கிட்டே போவோம். அன்பின் அஸ்திவாரத்தில தான் வாழ்க்கையே அடங்கி இருக்கு. வாங்குற சம்பளத்தில வயிறு வளரும். நட்பில தான் உறவு வளரும் ” என்று நேருவின் வீட்டில் எல்லா ஊழியர்களும் உருக்கமாகப் பேசிக்கொண்டார்கள்.
அன்று நேரு வீட்டில் நடந்த விருந்தை அனைத்து ஊழியர்களும் சாப்பிட்டு விட்டு அங்கேயே அடுத்த வாரம் யார் வீட்டுப் போக வேண்டும் சீட்டு எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் எடுத்தார்கள்.
“ஆதித்யன் ” என்பவரின் பெயர் வந்தது. வரும் வாரம் அத்தனை ஊழியர்களும் ஆதித்யன் வீட்டுக்கு போவதற்கு தயாராக இருந்தார்கள்.
கொரானா காலத்திற்கு பின் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. உண்மையிலே இப்படி நடந்தால் நல்லா இருக்கும்.