சிறுகதை

அன்பின் உச்சம் -ராஜா செல்லமுத்து

80 வயது தாண்டிய தன் மனைவிையை 90 வயது தாண்டிய கணவன் எங்கு சென்றாலும் அவர் கையை பிடித்துக் கொண்டு தான் அழைத்துச் செல்வார்

இது வீதியில் பார்ப்பவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஒரு சிலருக்கு அது எரிச்சலை தந்தது.

என்ன இருந்தாலும் இந்தக் கிழவியை இந்தக் கிழவன் கையப் புடிச்சிட்டு கொட்டிட்டு போறது நியாயமல்ல.

இந்த வயசுலயும் அந்தக் கிழவி மேல இவ்வளவு பாசமா? அப்படின்னு மத்தவங்க நினைப்பாங்க. ஒரு சிலர் பொறாமை படுவாங்க என்று அந்த வயதான தம்பதிகளை சிலர் வசைபாடினர் . சிலர் அவர்களை ஆராதித்தனர்.

தளர்ந்த அந்த கிழவனின் கை தளர்ந்த அந்த கிழவியின் கையை பிடி விடாமல் பிடித்துக் கொண்டு எங்கு சென்றாலும் செல்லும்.

கடை, வீடு, பார்க், ஹோட்டல் என்று அந்த வயதானவர்களின் ஊர்வலம் வலம் வந்து கொண்டே இருக்கும்

அந்த வயதான கிழவிக்கு பார்வை, தோற்றம், ஒருவிதமான வெறுமையை வெளிக் காட்டும்

இதைப் பார்ப்பவர்களின் தோரணை ஒரே கண்ணோட்டத்தில் தான் இருந்தது.

இப்பவே இந்த பிடி பிடித்துட்டு இந்தக் கிழவன் போனாருன்னா இளமையில் எப்படி பிடித்திருப்பார் ? பயங்கரமான கிழவன் போல இந்தக் கிழவன் என்று கிழவனை சிலர் வசைபாடினர்

அந்த அன்பின் வலிமை எத்தனை பேருக்குத் தெரியும் ? இரவில் மனைவியுடன் இருந்துவிட்டு காலையில் வேறு பெண்களை தேடும் மானங்கெட்டவர்களுக்கு மத்தியில்

இந்த வயதானவர்களின் தாம்பத்திய வாழ்க்கை தறுதலைகளுக்கு தவறு என்றுதான் தோன்றியது

எங்கு சென்றாலும் இணைபிரியாமல் சென்ற இந்த ஜோடிகளை

ஒருநாள் ஒருவன் கேட்டான்:

என்ன தாத்தா, எப்ப பாத்தாலும் இந்த பாட்டிய கையில புடிச்சிகிட்டு போறியே ?உனக்கு அசிங்கமா இல்லையா ? என்று

இதைக் கேட்டுச் சிரித்த அந்த கிழவன்

தன் கண்களில் கண்ணீர் வழிய கிழவியின் மன நிலையை உதிர்த்தார்

தம்பி என்னோட மனைவிய ஏன கையில் பிடித்து இருக்கேன் தெரியுமா? பார்க்கிறவங்களுக்கு வேணா தப்பா தெரியலாம். ஆனா அவளோட சூழ்நிலை, என்னென்ன தெரிஞ்சா நீங்க இப்பிடி பேச மாட்டீங்க. உங்களுக்குவேணுமுன்னா நாங்க ரெண்டு பேர் இப்படி போறது தப்பாயிருக்கலாம். உண்மை என்னன்னு தெரியுமா தம்பி

அவளுக்கு ஞாபகம் மறதி.அவளுக்கு நினைவெல்லாம் மறந்து போய் பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு தம்பி. நான் யாரு ?என்ன அப்படிங்கறது அவளுக்கு என்னன்னு தெரியாது .இந்த உலகமே அவளுக்கு சூன்யம் தான் மனுசங்க யாரு? மிருகங்கள் யாருன்னு? வித்தியாசப்படுத்த தெரியாது? அவளுடைய உலகம் தனி. அவ எங்கயும் போய்விடக் கூடாதுங்கிறதுக் காகத்தான் என் கையில பிடிச்சு வச்சிருக்கேன். எங்க போனாலும் ஒரு குழந்தையைக் கூப்பிட்டு போற மாதிரி கூட்டிட்டு போறேன்.

என்னோட மனைவி ரொம்ப அழகானவ தம்பி .அவளுடைய பாசம் ,அவளுடைய அன்பு, அவளுடைய அரவணைப்பு – என் குடும்பத்தை எவ்வளவு இழுத்துக்கொண்டு போச்சுன்னு தெரியுமா? இன்னைக்கு என்னைய அவளுக்கு ஞாபகம் இருக்காாது . ஆனா என் ஞாபகம் முழுசும் அவ தான் இருக்கா தம்பி. அதனால தான் எங்க போனாலும் அவளை நான் கையில பிடிச்சுட்டு போறேன். ஒரு குழந்தையை பிடிச்சுட்டு போற மாதிரி என் மனைவி பிடிச்சிட்டு போறேன். இது எவ்வளவு தூரம் இந்த பயணம்? அப்படிங்கிறது எனக்கு தெரியாது.

இந்த உசுரு இருக்கிற வரைக்கும் என்னோட மனைவி , என் விரலை பிடித்துட்டுதான் வருவா . இது சத்தியம் தம்பி என்று அந்த பெரியவர் சொன்ன போது

அந்த வயதானவர்களைப் பார்த்து கேலி செய்தவர்களின் கன்னத்தில் பளார், பளார் என்று அடிப்பது போல இருந்தது

சுருக்கம் விழுந்த அந்த உடல்கள் இரண்டும் கைகள் இணைந்தபடியே நடந்து போய்க் கொண்டிருந்தன

அவர்கள் காலடித் தடத்தில் காலம் மாண்பு மிக்க மனித வாழ்க்கையின் வரலாற்றை எழுதிக் கொண்டே சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *