பகுதி – 1
அல்பேனியா நாட்டில் ஸ்காப்ஜே நகரில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் நிக்கலோ –டிரானி பெர்னாய் தம்பதியின் மகளாகப் பிறந்தவர் அன்னை தெரசா. அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் ஆக்னஸ் என்பதாகும். அழகு நிறமும் நீலநிறக் கண்களும் கொண்டவள் ஆக்னஸ். அவள் கண்களில் எதிர்கால நம்பிக்கை ஒளி தெரியும்.
அவள் மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபட்டு வளர்ந்தாள். பொதுவாக குழந்தைகள் தமக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதுபோல கேட்காத வித்தியாசமான பெண் ஆக்னஸ். குழந்தைகளுக்கே உரிய பிடிவாத குணம் ஆக்னசிடம் பிஞ்சுப் பருவத்திலிருந்தே இருந்ததில்லை. அன்பும் இரக்கமும் அவளிடம் அதிகம் இருந்தது.அவளுக்கு அவள் அப்பாமீது தனிப்பாசம். அப்பாவிடம் கதை கேட்பது அவள்வழக்கம்.அவளுக்கு 9 வயது இருக்கும்போது 45 வயதான அவள் தந்தை திடீரென இறந்தார். தாங்க முடியாத சோகத்தை தாங்கிக் கொண்டாள் ஆகனஸ். அந்த ஆற்றல்தான் பின்னாளில் அடுத்தவர் துயரைத் துடைக்கும் பேராற்றலை அவளுக்குக் கொடுத்தது.
ஆக்னசுக்கு 12 வயது இருந்தபோது அவர்கள் பக்கத்து வீட்டில் ஒரு விதவைத் தாய் குடியிருந்தார். அவருக்கு ஆறு குழந்தைகள. அவர்கள் அனைவரையும் ஆக்னசின் அம்மா அழைத்து வந்து தன்வீட்டில் வைத்து ஆக்னசோடு சேர்த்து வளர்த்தார். அதுவே ஆக்னஸ் உள்ளத்திற்கு அன்பையும் இரக்க குணத்தையும் கொடுத்தது. அடுத்தவருக்கு உதவும் எண்ணத்தையும் வளர்த்தது.
12 வயதானபோது கன்னியர் மடத்தில் சேர்ந்து ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் தன் அம்மாவிடம் கூறினாள் ஆக்னஸ் . அதிர்ச்சி அடைந்த அம்மா . அதற்கான வயது இதுவல்ல ; முதலில் படி என்றார் அம்மா . அம்மாவின் சொல்லுக்கு அடிபணிந்து 18 வயது வரை படித்து வகுப்பில் முதல் மாணவியாகவும் அன்பில் பண்பில் முன்மாதிரியான மாணவியாகவும் தேர்ச்சி பெற்றாள் ஆக்னஸ். தான் நினைத்ததை நிறைவேற்ற மனவலிமை, தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் போராடி தன் தகுதிகளை உயர்த்திக் கொண்டாள் ஆக்னஸ்.
அதோடு தன் குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெற்று அயர்லாந்து மடத்தில் ஓராண்டு மக்களுக்கு சேவை செய்யும் பயிற்சி பெற்றார் .
இந்தியாவில் ஏழைகளுக்கு உதவ ஆக்னசை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். 1929 ஆம் ஆண்டு பம்பாய் வந்து அங்கு சிறிது காலம் தங்கி சேவைகள் செய்துவிட்டு பின்னர் 1930 ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு வந்தார்.
பிரான்ஸ் நாட்டில் தெரசா மார்ட்டின் என்ற பெண் துறவி நற்பண்புகள் , சுறுசுறுப்பு , கருணை உள்ளம் கொண்டு ஓடோடிச்சென்று ஏழைகளுக்கு உதவிவந்தார். அவரை .தனது முன்மாதிரியாகக் கொண்டிருந்த ஆக்னஸ். தெரசா என்ற அவரை பெயரையே தனது பெயராக மாற்றிக்கொண்டு கல்கத்தாவில் சேவை செய்யத் சென்றார் ஆக்னஸ்.
. அழுக்கு ,ஆபாசம் வியாதிகள் நிறைந்த கல்கத்தாவில் ஒரு கன்னியர் மடத்தில் தங்கினார் .
அந்த இடத்திற்கு வெளியே ஏழை எளிய மக்கள் பசியோடும் பட்டினியோடும் ஒருவேளை உணவுக்காக வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனிடையே வங்காளப்பஞ்சம் வேறு எல்லோரையும் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து மன வேதனை அடைந்தார் தெரசா. ஆங்கிலம், வங்காள மொழிகள் கற்றுக் கொண்டார். செயின்டிமேரி பள்ளியில் ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டுகள் அங்கு ஆசிரியராக சிறப்பாகப் பணிபுரிந்தார்.
– இன்னும் வரும் ….
நன்றி: – எழுத்தாளர் : சேவியர் , அன்னை தெரசா வாழ்வும் வழியும்.
#MotherTeresa #humanity #love #kind #Tamilnews #MakkalKural