சிறுகதை

அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி – ஆர். வசந்தா

Makkal Kural Official

லாவண்யா ஒரு அழகு தேவதை; அறிவுப் பெட்டகம்; கலைக்குரிசில்; விளையாட்டு வீராங்கனை. இப்படி கல்லூரியில் எதிலும் முதன்மை, படிப்பிலும் முதன்மை. எல்லோரும் அவளைப் புகழப் புகழ அவளுக்கு செருக்கு மீறியது. மகா கர்வி என்ற பெயரும் அவளுக்கு கிடைத்தது.

சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலையும் தேடி வந்தது. கேட்கவா வேண்டும் அவளின் கர்வத்திற்கு.

சில நாளில் லாவண்யாவிற்கு மாப்பிளை பார்க்க வேண்டுமென்று அம்மா அப்பா முடிவெடுத்தனர். வந்த எல்லா வரனையும் லாவண்யா நிராகரித்தாள்.

அவளின் தம்பிக்கும் உறவினர் வீட்டில் லாவண்யாவை ஒத்த பெண்களுக்கும் திருமணம் முடிந்து அனைவருக்கும் குழந்தைகள் பிறந்து விட்டன. அவளின் அப்பா மட்டும் கவலைப் பட்டார். அவர் சிறிது காலத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அம்மா ‘‘ நம் லாவண்யா மட்டும் நினைத்ததை சாதிப்பாள்’’ என்று தெம்பாகத் தான் இருந்தாள்.

கொஞ்ச நாளில் மதுசூதனன் என்ற வரன் வந்தது. எல்லாம் ஒத்துப்போய் லாவண்யாவிற்கும் அந்த வரன் பிடித்திருந்தது.

ஏதோ காரணத்தினால் மதுசூதனன் வீட்டில் லாவண்யாவை மறுத்து விட்டார்கள். கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாள். ஆனாலும் பிறகு தைரியமாகி விட்டாள். லாவண்யா தன்னை நிராகரிப்பார்கள் என்று நினைக்கவில்லை.

பிறகு வந்த வரன்கள் அனைத்தும் அவளை நிராகரித்தனர். தன்னைவிட அதிகம் படித்தவள் என்று சிலரும் வயது கூடுதல் என்று சிலரும் நிராகரித்து விட்டனர். எதற்கும் கலங்காமல் தான் சிறிது காலம் இருந்தாள்.

ஆபீசில் ஹாய் லாவண்யா என்றவர்கள் சில நாளில் மிஸ் லாவண்யா என்றனர். பிறகு நாட்கள் செல்லச் செல்ல மேடம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாள். பிறகு ஆன்டி என்ற பட்டம் தான் தேடிவந்தது. தீர்மானித்தாள்.

லாவண்யா மிகவும் முயற்சித்தாள். ஒரு திருமண தகவல் நிலையத்திற்கு சென்று பதிவு செய்து வந்தாள். எதிலும் அவளுக்கு சம்மதம் என்ற பதிலே வரவில்லை.

பிறகு ஒரு வரன் வந்தது. வயது முதிர்ந்தவன் தான். மறுமணம் தான் முதல் மனைவி திருமண முறிவு ஏற்பட்டது என்று எழுதியிருந்தான். தன் தம்பி தங்கைகளுக்கு திருமணம் செய்து கடமையெல்லாம் செய்ததால் தன் திருமணம் லேட்டாகி விட்டது என்றான். ஆனால் சொற்ப சம்பளத்தில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்வதாகச் சொல்லியிருந்தான். உனக்கு சம்மதமாக இருந்தால் தான் மணமுடித்துக் கொள்வதாக சொன்னான்.

இது லாவண்யாவுக்கு பெரிய நற்செய்தியாக இருந்தது. சம்மதம் என்றும் சொல்லி விட்டாள். பெண் பார்க்க வரச் சொன்னாள் லாவண்யா.

தன் பெயர் பிரேம்குமார் என்றான். பெண் பார்க்க வேண்டியதில்லை. போட்டோ அனுப்பினால் போதும் என்றான் பிரேம்குமார். திருமணம் கோலாகலமாக நடந்தது.

பிறகு தான் தெரிந்தது பிரேம்குமார் லாவண்யாவால் நிராகரிக்கப்பட்டவன் என்று.

எனினும் அவனும் ஒரு கம்பெனியில் டைரக்டர் என்று தெரிந்தது. முகமும் தலையும் மட்டுமே முதிர்வாக இருந்தது. அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. கடைசியில் தான் நினைத்தது போலவே நடந்தது என்று ஆனந்தம் கொண்டாள்.

முதலிரவில் அவள் பாடிய பாடல் என்னை அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி என்று அவன் மேல் சாய்ந்தாள்.

Loading

One Reply to “அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி – ஆர். வசந்தா

  1. ஆர்.வசந்தாஅவருடையகதைஇந்தகாலத்துப்பெண்கள்மனநிலையைதெளிவாக எடுத்துகாட்டியது என்றால்மிகையல்ல.
    பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.
    கைபேசிஎண்:9113988739

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *